வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (27/04/2018)

கடைசி தொடர்பு:10:05 (27/04/2018)

குடிநீருக்காக போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்த கிராமப் பெண்கள்!

பொன்னமராவதி ஒன்றியம் சடையம்பட்டியில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஒன்றுகூடி சாலை மறியல் செய்தனர். இதனால், மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெண்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் சடையம்பட்டி என்ற கிராமத்தில், மக்களின் வாழ்வாதாரமே விவசாயம்தான். ஒருகாலத்தில் செழித்துக்கிடந்த இந்த கிராமம், மழையில்லாமலும் நிலத்தடிநீர் இல்லாமலும் விவசாயம் முற்றிலுமாகப் பொய்த்துப் போய்விட்டது. விவசாயம் பார்த்தவர்கள், காலப்போக்கில் விவசாயக் கூலிகளாக இடம் பெயர்ந்தார்கள். சொந்த மண்ணையும் வளர்ப்பு ஆடு, மாடு, கோழிகளையும் விட்டுப் பிரிய மனம் இல்லாதவர்கள், அந்தக் கிராமத்திலேயே கிடந்து உழன்றார்கள். கோடைக்காலம் வந்துவிட்டாலே, சடையம்பட்டி கிராம மக்களின் வாழ்க்கை சொல்லி மாளாது. "அன்றாடம் குளிப்பதை விடுங்கள். வறண்ட நாக்கை நனைக்கக்கூட, நல்லதண்ணீர் கிடைக்காது" என்று தாங்கள் படும் துயரத்தைச் சொல்கிறார் கிராமத்துப் பெரியவரான பச்சமுத்து.

"ஒன்றிய அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர், மாவட்ட குறைதீர்ப்புக் கூட்டங்கள் என்று விடாமுயற்சியாக மனுக்கள் கொடுத்தோம். ஆனாலும் எந்தவித பலனும் இல்லை. தண்ணீர் ரெண்டு நாளில் வந்துடும்னு சொல்லிச் சொல்லியே ரெண்டு மாதங்களாக அலைக்கழிக்கிறாங்க' என்று வேதனை தெரிவித்தார்கள் பெண்கள். குடிநீர் வழங்காத அதிகாரிகளின் மெத்தனத்தைக் கண்டித்து, பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான பிளாஸ்டிக் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த குடங்களுக்கு முன்பாக,  பச்சை நிற வேட்டி அணிந்த பெரியவர் ஒருவர், தனது துண்டை விரித்துப் படுத்துவிட்டார்.

இதைப் பார்த்ததும் கூடியிருந்த பெண்களும் 'தண்ணீர் குடு... தண்ணீர்குடு... தவிச்ச வாய்க்குத் தண்ணீர் குடு'. 'சாகுறோமே சாகுறோமே... தண்ணி இல்லாம சாகுறோமே" என்று குரல் எழுப்பத்தொடங்கினார்கள். சாலைமறியலால், இந்தப் பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் அவர்ளும்கூட தங்கள் ஊரிலும் இதுதான் நிலைமை. காசு உள்ளவனுக்கு தண்ணீர் கிடைக்குது. நம்மள மாதிரி சாதாரண மக்களுக்கு தண்ணீர் கிடைக்க மாட்டேங்குது" என்று கண்ணீர்விட்டனர். தகவலறிந்து வந்த பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன் மற்றும் காரையூர் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் ஆகியோர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தைச் சரிசெய்தனர்.  "குடிநீர் வழங்குவதற்கான போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதும் போராட்டம் கைவிடப்பட்டது.