வெளியிடப்பட்ட நேரம்: 09:32 (27/04/2018)

கடைசி தொடர்பு:10:12 (27/04/2018)

கிரிவலப்பாதைக்காக மரங்களின் வேரில் ஆசிட்... என்ன நடக்கிறது திருவண்ணாமலையில்?

கிரிவலப்பாதைக்காக மரங்களின் வேரில் ஆசிட்... என்ன நடக்கிறது திருவண்ணாமலையில்?

திருவண்ணாமலையிலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வதால் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, கிரிவலப் பாதையை அகலப்படுத்தி, விரிவாக்கம் செய்யும் பணி 2016-ம் ஆண்டு தொடங்கியது. கிரிவலப் பாதை விரிவாக்கப் பணியின்போது, விலை மதிப்புள்ள அதிக மரங்கள் வெட்டப்படுவதாகச் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை செய்தது. அப்போது தடைவிதித்த பசுமைத் தீர்ப்பாயம், ஒரு சில நிபந்தனைகளுடன் பணிகள் மீதான தடையை விலக்கியது. அதில் 'ஒரு மரத்தைக்கூட வெட்டாமல், விரிவாக்கம் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட வனத்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் பணிகளை அவ்வாறே செய்ய அனுமதித்தது. ஆனால், கடந்த சில நாள்களாக கிரிவலப்பாதையின் ஓரத்தில் இருக்கும் மரங்கள் பட்டுப்போகத் துவங்கியுள்ளன. இதற்குக் காரணம்,  ஆசிட் ஊற்றியதுதான் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 

 

பட்டுப்போகும் கிரிவலப்பாதை மரங்கள்

Photo - Arun Shaythran

செந்தமிழ் அரசுஇதுகுறித்து, நம்மிடம் பேசிய, திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் அமைப்பின் தலைவர் செந்தமிழ் அரசு, ''கிரிவலப் பாதையில் மரங்களை வெட்டாமல் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி பணிகள் நடைபெற்று வந்துகொண்டிருந்தன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக சாலையோரம் பசுமையாக இருந்த மரங்கள் பட்டுப்போய் காட்சியளிக்கின்றன. மரங்களின் வேர்களில் அமிலம் ஊற்றுவதே இதற்குக் காரணம். இப்பாதையில் கடைகள் வைத்துள்ள வணிகர்களே இதற்குக் காரணம் என்று சொல்வதெல்லாம் பொய். கடைக்கு முன்னர் மரங்கள் இத்தனை ஆண்டுகள் இருந்தன. இதுதவிர, கடைகள் இல்லாத இடங்களில் உள்ள மரங்களும் வாடுகின்றன. வாடும் மரங்களை ஒட்டி இருக்கும் நிலங்களும், வயல்வெளிகளும் பசுமையாக இருக்கின்றன. எனவே, இது வறட்சியால் பாதிக்கப்படுகிறது என்றும் சொல்ல முடியாது. இது வனத்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும், சாலை விரிவாக்கம் செய்யும் கான்டிராக்டரும் சேர்ந்து செய்யும் செயல்தான். அவர்களுக்கு இந்த மரங்கள்தான் முக்கியத் தேவை. முன்பெல்லாம் மக்கள் வனத்துக்குள் செல்லும் நிலை இருந்தது. ஆனால், இப்போது கான்டிராக்டர்களைத் தவிர யாரையும் வனத்துறை அனுமதிப்பதில்லை. மாவட்ட ஆட்சியர் மண் பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி மண் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதுகுறித்த அறிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்" என்றார். 

இப்பிரச்னை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ''மரங்களில் உள்ள வேர்களில் அமிலம் ஊற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்போதைக்கு மண் மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவின் அடிப்படையில்தான் அடுத்த நடவடிக்கை இருக்கும்" என்றார். 

கிரிவலப்பாதை மரங்கள்

Photo - Arun Shaythran

கிரிவலப் பாதையில் விரிவாக்கத்துக்கு முன்பும், பின்பும் இருக்கும் மரங்கள் எவ்வளவு, என்பதை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். கிரிவலப் பாதை விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்படும்போது தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முக்கியமான காரணம், திருவண்ணாமலை மக்களும், பக்தர்களும்தான். ''மனிதச் சங்கிலி, பேருந்து மறியல் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு மரங்களைக் காத்தோம். ஆனால், கண்முன்னால் வெட்டப்பட்ட மரங்களைத் தடுத்த எங்களால் கண்ணுக்குத் தெரியாமல் மரங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க முடியவில்லை" என்று கவலை தெரிவிக்கின்றனர் அம்மக்கள். பல ஆண்டுகளாக நிலைத்து உயிருடன் நின்ற மரங்கள் சிதைந்த எலும்புக் கூடுகள் போலக் காட்சியளிக்கிறது. 

இதற்கு மாவட்ட நிர்வாகம்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை கிரிவலப் பாதை சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 


டிரெண்டிங் @ விகடன்