'பத்மநாபனின் பாலியல் தொல்லை தாங்க முடியல' - பெண் ஊழியர்களால் சிக்கிக்கொண்ட அரசு அதிகாரி

”உன்னையும் பிடிச்சுடறேன், பாம்பையும் பிடிச்சுடறேன்” என பெண் ஊழியர்களிடம் பேசிய புதுச்சேரி அரசு உயர் அதிகாரி ஒருவர், வசமாக சிக்கியிருக்கிறார்.

புதுச்சேரி

புதுச்சேரியில், பணியிடங்களில் பெண்களுக்கு நேரிடும் பாலியல் தொல்லைகள்குறித்து விசாரிக்க, ’உள்ளூர் புகார்கள் குழு’ (local complaints committee) என்ற தனிப் பிரிவு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்தப் பிரிவின் தலைவராக, முன்னாள் குழந்தைகள் நலக்குழு தலைவி டாக்டர் வித்யா ராம்குமார் நியமிக்கப்பட்டார். இந்தப் பிரிவு தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள், தங்கள் மேலதிகாரிகளால் ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளைப் புகார்களாக அளித்தனர். அதில், புதுச்சேரி கால்நடைத்துறையின் இயக்குநராகப் பணிபுரியும் பத்மநாபனின் பாலியல் தொல்லைகள் தாங்க முடியவில்லை என்று எழுத்துபூர்வமாக அங்கு பணிபுரியும் பெண்கள் அளித்தனர்.

பத்மநாபன்

அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் அழைத்து விசாரணை நடத்திய டாக்டர் வித்யா ராம்குமார், 27 பெண்களிடம் பாலியல் தொல்லை தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவுசெய்தார். அதையடுத்து, இந்தப் புகார்குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பத்மநாபனுக்குக் கடிதம் அனுப்பியது அந்தக் குழு. ஆனால் அங்கு ஆஜராகாத அவர், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, தன்னை விசாரிப்பதற்குத் தடை ஆணையை பெற்றார். ரகசியமாக நடைபெற்ற இந்த விசாரணைகுறித்த தகவல் லீக் ஆனதால், கால்நடைத்துறையை முற்றுகையிட்ட மகளிர் அமைப்புகள், பத்மநாபனை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், இயக்குநர் பத்மநாபன் தனது துறையில் பணிபுரியும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசியதாக வெளியான ஆடியோக்கள், காதில் கேட்க முடியாத ரகம்.

ஆடியோவில் சில சாதாரண வரிகள் மட்டும்:

பெண்: ஹலோ... குட் ஆஃப்டர்னூன் சார்...

ஆண்: (அதிகாரி என்று சொல்லப்படுபவர்) என்னம்மா... வணக்கம் அம்மா...

பெண்: சார் குவார்ட்ரஸ்ல பாம்பு வந்துடுச்சி சார்...

ஆண்: ஏன் வந்துச்சி பாம்பு...?

பெண்: சார், எப்பதான் எனக்கு டிரான்ஸ்ஃபர் போடுவீங்க? இவ்வளவு மரம், செடி இருக்கு இங்க போயி லேடீஸை போட்டிருக்கீங்க? யாராவது ஜென்ஸ் போட்டிருந்தாகூட தைரியமாக இருக்கலாம்.

ஆண்: சரி... சரி... நான் அடுத்த வாரம் வர்றேம்மா...

பெண்: அடுத்த வாரம் வந்து பாம்பையா பிடிக்கப் போறீங்க?

ஆண்: பாம்பையும் பிடிச்சுடறேன், உன்னையும் பிடிச்சுடறேன்...

புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அவரச உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், “டாக்டர் பத்மநாபனை கால்நடைத்துறை இயக்குநர் பதவியிலிருந்து விடுவிப்பதாகவும், உடனே அவர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து, எஸ்.பி., தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!