ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேரின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுமா? - உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஓபிஎஸ்


அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, அக்கட்சியின் பொருளாளராக இருந்த நிதிமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பொறுப்பேற்றார். சில நாள்களில், சசிகலா குடும்பத்தோடு ஏற்பட்ட மோதலால் முதல்வர் பதவியில்  இருந்து திடீரென்று ராஜினாமாசெய்தார். அவருக்கு ஆதரவாக 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இந்நிலையில், சசிகலா ஆதரவாளராக இருந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஆனார். அப்போது, 'ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் அவரிடம் இல்லை' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தனது அரசுமீது சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் ஓட்டுப்போட்டனர். 

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களாக இருந்துகொண்டு முதல்வருக்கு எதிராக ஓட்டு போட்ட அந்த 11 எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகர் தனபாலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை' என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் மனு கொடுத்தனர். இது, 'சட்டவிரோதம்' என்று அ.தி.மு.க கொறாடா, சபாநாயகரிடம் புகார் செய்தார். அதில், 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அந்த 18 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த நிலையில், தி.மு.க கொறாடா சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்.

அதில், ''ஆளும் கட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள், ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டு போட்டுள்ளனர். அவர்கள்மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த 11 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார். இதே கோரிக்கையுடன் வெற்றிவேல் உள்பட 4 பேர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளைத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து முடித்து,  தீர்ப்புத் தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. அந்த வழக்கில், இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு விசாரணையும் முடிந்து தீர்ப்புக்காகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன் தீர்ப்பு, சனிக்கிழமை சொல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுமா, இல்லையா..? என்பது இன்று தெரிந்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!