கூவாகம் திருவிழா செல்கிறீர்களா? ஆதார் கார்டு அவசியம் | Are you going to Koovagam festival? Aadhar card is mandatory

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (27/04/2018)

கடைசி தொடர்பு:11:35 (27/04/2018)

கூவாகம் திருவிழா செல்கிறீர்களா? ஆதார் கார்டு அவசியம்

கூவாகம் திருவிழா செல்பவர்கள் லாட்ஜில் அறை எடுக்க, ஆதார் கார்டு அவசியம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவித்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள கூவாகத்தில் நடக்கும் கூத்தாண்டவர் சித்திரைத் திருவிழா, உலக அளவில் முக்கியத்துவம்பெற்றது. இதில் கலந்துகொள்ள மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற நகரங்களிலிருந்தும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திருநங்கைகளும், பார்வையாளர்களும் விழுப்புரத்தை நோக்கி படையெடுப்பார்கள். இவர்களுக்கு நிகராக இந்த விழாவைப் பதிவுசெய்ய, உலகெங்கிலும் இருந்து பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் வருவார்கள். திருவிழா தேதிக்கு ஒரு மாதத்துக்கு முன்பே, விழுப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிரம்பி வழிவார்கள் திருநங்கைகள். அதுமட்டுமல்லாமல், அன்றாடம் வண்ண வண்ண உடைகளில், விழுப்புரம் வீதிகளில் ஒய்யாரமாக உலா வருவார்கள்.

அதனால், திருவிழா முடியும் வரை எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டுவிடாமல் இருக்க, லாட்ஜ் மற்றும் பார் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது விழுப்புரம் மாவட்ட காவல்துறை. அப்போது பேசிய டி.எஸ்.பி.,சங்கர், ''லாட்ஜில் அறை கொடுக்கும்போது, யார் தங்குகிறார்கள் என்பதை நீங்கள் உறுதிசெய்வதோடு, அவர்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக ஆதார் எண், செல்போன் எண் போன்றவைகளை வாங்கிக்கொண்டுதான் அவர்களுக்கு அறை தர வேண்டும். குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் ஓர் அறையில் யாரையும் தங்கவைக்கக் கூடாது. குறித்த நேரத்தில் லாட்ஜ்களை மூடிவிட வேண்டும். அதேபோல, 12 மணி வரை பார்களைத் திறந்துவைக்க நீங்கள் அனுமதி பெற்றிருந்தாலும், கூவாகம் திருவிழா முடியும் வரை 11 மணிக்கே மூடிவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க