வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (27/04/2018)

கடைசி தொடர்பு:14:40 (27/04/2018)

தூத்துக்குடி துறைமுகத்துக்கு முதன்முறையாக வந்த பெரிய சரக்குக் கப்பல்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு முதன்முறையாக 38 மீ., அகலமுடைய எம்.வி., வீனஸ் கிஸ்டிரி என்ற பெரிய சரக்குக் கப்பல் வருகை தந்துள்ளது. இக் கப்பலைக் கையாண்டு துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு முதன்முறையாக 38 மீட்டர் அகலமுடைய எம்.வி. வீனஸ் ஹிஸ்டரி என்ற பெரிய சரக்குக் கப்பல் வருகை தந்துள்ளது. இக் கப்பலைக் கையாண்டு துறைமுகம் சாதனை படைத்துள்ளது. 

பெரிய சரக்கு கப்பல்

இதுகுறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக சேர்மன் ஜெயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், ''தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு 38 மீட்டர் அகலமுடைய எம்.வி.வீனஸ் ஹிஸ்டரி (M.V.Venus History) என்ற பெரிய சரக்கு கப்பல் முதன் முறையாக வருகை தந்துள்ளது. இக் கப்பலின் மொத்த நீளம் 235 மீட்டர், அகலம் 38 மீட்டர், மொத்த எடை 95,692 மெட்ரிக் டன்கள் ஆகும். 50,647 மெட்ரிக் டன் சரக்குகளுடன் வந்த இக்கப்பலைக் கையாண்டு இத் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

இந்தக் கப்பல் தென்னாப்பிரிக்காவில் உள்ள சல்தானா விரிகுடாவில் உள்ள துறைமுகத்திலிருந்து கிளம்பி, மர்மகோவா துறைமுகம் வழியாகத் தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. துறைமுகத்தின் 9வது சரக்குக் கப்பல்தளத்தில் இந்தச் சரக்கு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டது. 3 நகரும் பளுதூக்கி இயந்திரங்களின் மூலம் 45,000 டன் இரும்புத் தாதுக்களை வெளியேற்றிவிட்டு புறப்பட்டது. இவ்வகைப் பெரிய சரக்குக் கப்பல்களைக்  கையாளுவதன் மூலம் இத்துறைமுகத்துக்கு இந்தியா சிமென்ட் நிறுவனம், விசாகப்பட்டினத்தில் இருந்து வருடத்துக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் சிமென்ட் சிலாக்கினைக் கையாள இருப்பது குறிப்பிடத்தக்கது. இத் துறைமுக வரலாற்றிலேயே முதன் முறையாக 38 மீட்டர் அகலம் கொண்ட சரக்குக் கப்பலை கையாண்டு இருப்பது, இந்தியாவின் கிழக்குக் கடற்கரை சர்வதேச கடல் வாணிபத்தின் அடுத்த நிலைக்கு அடி எடுத்து வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க