வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (27/04/2018)

கடைசி தொடர்பு:11:30 (27/04/2018)

உச்ச நீதிமன்றத்தைக் காரணம் காட்டி நளினி விடுதலையை நிராகரித்த உயர் நீதிமன்றம்

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாகக் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, 2014-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.  

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யநாராயணன், “ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவர்கள் வழங்கும் உத்தரவின் அடிப்படையில், நளினியின் கோரிகையைத் தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்கும்” எனத் தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து நளினி, மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு ‘விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம் எனக் கூறியது.’

இதையடுத்து இதன் இறுதித் தீர்ப்பு ஏப்ரல் 27-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், நளினியை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் கூறினர்.