வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (27/04/2018)

கடைசி தொடர்பு:11:50 (27/04/2018)

இப்படி கொள்ளையடிக்காதீங்க; பெரும் இழப்பை சந்திப்பீர்கள்! வங்கிகளுக்கு ராமதாஸ் எச்சரிக்கை 

ராமதாஸ்

"வங்கிகள் வழங்கும் காசோலைகள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் அவை சார்ந்த சேவைகள் அனைத்தையும் இலவச சேவைகளாகக் கருதாமல் வாடிக்கையாளர்களின் உரிமைகளாகக் கருத வேண்டும். இதற்காக வரி வசூலிக்கும் முடிவை மத்திய அரசும், கட்டணம் வசூலிக்கும் முடிவை வங்கிகளும் கைவிட வேண்டும்" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் அனைத்து வணிக வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் காசோலைப் புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகள், அவற்றைக் கொண்டு செய்யப்படும் பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்கு தனியாகக் கட்டணம் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தை வங்கிகள் செயல்படுத்தினால், அது வணிக வங்கிகளின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், இப்போது இலவசமாக வழங்கிவரும் இச்சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும்படி கட்டாயப்படுத்துவதே மத்திய அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, காசோலைப் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டுகளுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.100 வரை வசூலிக்கப்படும் போதிலும், சேமிப்புக் கணக்கு உள்ள வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் மையங்களில் மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கிகளின் பணம் வழங்கும் நடுவங்களில், மாதத்துக்கு 3 முறையும் இலவசமாகப் பணம் எடுக்கவும் செலுத்தவும் முடியும். ஆனால், இந்தச் சேவைகள் அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவுசெய்துள்ளன. பொதுத்துறை மற்றும் வணிக வங்கிகள், இதுவரை கட்டணமின்றி வழங்கிவந்த இந்தச் சேவைகளுக்கு, கடந்த ஐந்தாண்டுகளுக்கு பின்தேதியிட்டுச் சேவை வரி செலுத்த வேண்டும் என்று பொருள்கள் மற்றும் சேவை வரி நுண்ணறிவுப்பிரிவின் தலைமை இயக்குநர் ஆணையிட்டிருப்பதாகவும், அதைத் தொடர்ந்தே இந்த முடிவுக்கு வங்கிகள் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. காசோலைகள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் அவை சார்ந்த சேவைகளுக்கு, சேவை வரி வசூலிக்கும் அரசின் முடிவும், அதைக் காரணம் காட்டி அச்சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகளின் முடிவும் தவறானவை; ஏற்க முடியாதவையாகும்.

காசோலைகளும், ஏடிஎம் கார்டு சார்ந்த சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாகக் கூறுவதே பெரும் அபத்தமாகும். பொதுத்துறை வங்கிகளாக இருந்தாலும், தனியார்துறை வங்கிகளாக இருந்தாலும், அவற்றின் மூலதனம் என்பது அந்த வங்கிகளின் ஒட்டுமொத்த வரவு - செலவில் 10 சதவிகிதம்கூட இருக்காது. மீதமுள்ள பணம் முழுவதும் வாடிக்கையாளர்களின் பணம் தான். அவர்கள் சேமிப்புக் கணக்கில் வைத்துள்ள தொகைக்கு, சராசரியாக 4 சதவிகிதம் மட்டுமே வட்டி கொடுக்கும் வங்கிகள், அத்தொகையைக் கடனாகக் கொடுத்து, அதிகபட்சமாக 16 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கின்றன. வங்கிகள் ஒவ்வோர் ஆண்டும்  ஈட்டும் பல்லாயிரக்கணக்கான கோடி லாபத்துக்கு, வாடிக்கையாளர்களின் சேமிப்புதான் அடிப்படையாகும். அதற்கான சலுகையாகத்தான் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு காசோலைகளை இலவசமாக வழங்குகின்றன. இது, வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் லாபத்தில் ஒரு விழுக்காடுகூட இருக்காது.

தானியங்கிப் பணம் வழங்கும் எந்திரங்களில் ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் எடுப்பதும், செலுத்துவதும்கூட வங்கிக் கிளைகளில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுதானே தவிர, வாடிக்கையாளர்களுக்கு காட்டப்படும் சலுகை அல்ல. தானியங்கிப் பணம் வழங்கும் மையங்கள் அனைத்தும் மூடப்பட்டால், வாடிக்கையாளர்களைவிட வங்கிகள்தான் மிகக்கடுமையாக பாதிக்கப்படும். இதுதான் உண்மை நிலை. ஆனால், இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் காசோலைகளும், ஏடிஎம் கார்டுகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச சேவைகள் என அரசு நினைப்பது தவறு. அவற்றுக்காக சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு அழுத்தம் கொடுப்பது அதைவிட தவறு. இது, வங்கிகளை வாழவைக்கும் வாடிக்கையாளர்களைக் கொள்ளையடிப்பதற்கு ஒப்பான செயலாகும்.

பொருள்கள் மற்றும் சேவை வரி இயக்குநரகம் கோருவதைப் போன்று, வங்கிகள் பின்தேதியிட்டு சேவை வரி செலுத்துவதாக இருந்தால், குறைந்தபட்சம் ரூ.6000 கோடி செலுத்தவேண்டியிருக்கும். இந்தத் தொகை முழுவதும் வாடிக்கையாளர்களின் தலையில்தான் செலுத்தப்படும். வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் சுமையாக அமையும். இதற்கு அஞ்சி, வாடிக்கையாளர்கள் வங்கி முறையிலிருந்து வெளியேற நினைத்தால், அது வங்கிகளுக்குப் பெரும் இழப்பாக அமையும். எனவே, வங்கிகள் வழங்கும் காசோலைகள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் அவை சார்ந்த சேவைகள் அனைத்தையும் இலவச சேவைகளாகக் கருதாமல், வாடிக்கையாளர்களின் உரிமைகளாகக் கருத வேண்டும். இதற்காக வரி வசூலிக்கும் முடிவை மத்திய அரசும், கட்டணம் வசூலிக்கும் முடிவை வங்கிகளும் கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.