'என்னை ரொம்ப யோசிக்கவெச்சது'- தற்கொலையைத் தடுக்கும் விவசாயியின் குறும்படம்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரப்பகுதியில் உள்ள செழிப்பான ஊர், முள்ளுக்குறிச்சி. அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி வெங்கிடாச்சலம், நெல், கரும்பு, வாழை போன்றவற்றைப் பயிர்செய்துவருகிறார். ஒரு காலத்தில், ரசாயன உரக்கடை நடத்தியவர். இயற்கை விவசாயத்தின்மீது கொண்ட ஆர்வம் காரணமாக, மண்ணை நஞ்சாக்கி, உணவை விஷமாக்கும் ரசாயன வியாபாரத்தை நிறுத்திக்கொண்டார். அதோடு நில்லாமல், பட்டிதொட்டியெல்லாம் பயணம்செய்து, விவசாயிகளைச் சந்தித்து இயற்கை விவசாயப் பிரசாரமும் செய்துவருகிறார்.

பச்சைப்பட்டு விரித்ததுபோல காட்சிதரும் நெல்வயல் வரப்பில் நடந்து வந்துகொண்டிருந்தவரை எதிர்கொண்டு சந்தித்துப் பேசினோம். ''எனக்கு 25 ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கு. அதுல, முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் மேற்கொண்டு வர்றேன். டிராக்டர் போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்துவதில்லை. உழவு மாடுகளை வைத்துதான் வயல்வேலைகளைச் செய்றேன். ரசாயன உரத்தின் தீமைகளைத் தெரிஞ்ச பிறகு, கடந்த 6 வருஷமா ஒரு கைப்பிடி அளவு ரசாயன உரத்தைக்கூட என்னோட வயல்ல இறைப்பதில்லை. முழுக்கமுழுக்க பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூலிகை பூச்சிவிரட்டிபோன்ற இயற்கை இடுபொருள்களைத்தான் பயன்படுத்துறேன். இயற்கை விவசாயம்தான் நல்லது, லாபகரமானது என்று கூவிக்கூவி சொன்னாலும், இன்னும் நிறைய விவசாயிங்க ரசாயன விவசாயத்தை விட்டு வெளிவராமல் இருக்காங்க. உரத்துக்கு மேல உரம், கடனுக்கு மேல கடன்னு வாங்கி வாங்கி நிலத்துல போட்டு, உற்பத்திச் செலவு அதிகமாகி, கட்டுபடியான விலை கிடைக்காமல் கடனாளியாகி, சிலர் தற்கொலை வரைக்கும் போயிடறாங்க.

நாடு முழுவதும் விவசாயிங்க தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாபோச்சு. உலகத்துக்கே சோறுபோடும் விவசாயி, தனக்கு சோறில்லாமல் தற்கொலைசெய்துகொள்வது எவ்வளவு முரண்பாடு. பல்லாயிரம் கோடி வங்கியில கடனை வாங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போய் சொகுசு வாழ்க்கை வாழும் தொழிலதிபருங்க யாராச்சும்  தற்கொலை செய்துகொள்றாங்களா? பயிரைக் காப்பாத்த கடன் வாங்கிய விவசாயி மட்டும் ஏன் தற்கொலை செய்துக்கணும்? இந்த விஷயம், என்னை ரொம்ப யோசிக்கவெச்சது. விவசாயிகளை தற்கொலையிலிருந்து காப்பாத்த, இயற்கை விவசாயத்தால் மட்டும்தான் முடியும்னு நம்மாழ்வார் ஆணித்தரமா சொல்லியிருக்கார். அவரின் வாக்குப்படி, இயற்கை விவசாயம் பத்தின விழிப்பு உணர்வை ஏற்படுத்தணும்னு முடிவுசெஞ்சேன். வெறும் பிரசங்கம்போல நாம் பேசினா ரசிக்கும்படியா இருக்காது என்பதாக முடிவு செஞ்சு, குறும்படமா எடுத்து அதை கிராமங்கள் தோறும் எடுத்துப்போய் ஒளிபரப்பலாம். அதுதான் விவசாயிகளிடத்தில் இயற்கை விவசாயத்தைக் கொண்டுசேர்க்க எளிதான வழி என்று முடிவுசெய்து, பூமித்தாய் என்கிற பெயரில் நானே கதை வசனம் எழுதி இயக்கினேன். என்னோட மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களையும் உள்ளூர் கிராமவாசிகளையும் நடிக்கவைத்தேன்.

ஒரு மணிநேரம் ஓடக்கூடிய அளவில் அதை எடிட் செய்து, பின்னணி இசை சேர்த்து குறுந்தகடாக வெளியிட்டுள்ளேன். நான் எடுத்துள்ள 'பூமித்தாய்' குறும்படத்தை விவசாயிகளுக்கு மட்டுமல்ல, பள்ளிகளுக்குச் சென்று அங்கு பயிலும் குழந்தைகளுக்கும் திரையிட்டுக் காட்டி, அவர்களுக்கும் இயற்கை விவசாயம்குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்திவருகிறேன். எனது குறும்படம் மூலம் பல விவசாயிகள் இயற்கையை நோக்கி திரும்பிவருகிறார்கள். அது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்து, இரண்டு குறும்படங்கள் எடுக்கும் முயற்சியில் உள்ளேன். ஒன்று, சுற்றுச்சூழல் சம்பந்தமானது. இன்னொன்று, 'பாரம்பர்ய மரங்கள்’ குறித்துப் பேசும் விரிவான படம். அதிலும் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் உள்ளூர் வாசிகளும்தான் நடிகர்கள்'' என்று முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!