வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (27/04/2018)

கடைசி தொடர்பு:13:30 (27/04/2018)

'டார்கெட் விஜயபாஸ்கர்!' எடப்பாடி அரசுக்கு எதிரான மத்திய அரசின் வியூகம்

எடப்பாடி பழனிசாமி அரசு, இனி மோடி அரசுக்கு எட்டிக்காய் அரசாக இருக்கப்போகிறது. தமிழக அரசின் மீதான தங்களது மேலாதிக்கத்தை இனிதான் மத்திய அரசு முழுமையாகக்  காட்டப்போகிறது. அதன் முதல் அறிகுறியே  நீதித்துறை வழியாக அரசுக்கு நெருக்கடியை ஆரம்பித்திருப்பதுதான் என்கிறார்கள் மத்திய அரசுக்கு நாள்தோறும் ரிப்போர்ட் அனுப்பிவரும் உளவுத்துறை அதிகாரிகள்.

'ஒரு மாதம்கூட ஓடாது' என்று சொல்லப்பட்ட எடப்பாடி அரசு, ஓர் ஆண்டைத் தாண்டி வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது. பன்னீருக்கு மட்டுமே டெல்லியில் மவுசு என்ற பிம்பத்தையும் தனது அரசியல் சாதுர்யத்தால் உடைத்து, நானும் உங்களுக்கு விசுவாசமானவன் என்பதைத் தனது செய்கையால் செய்துகாண்பித்தார் எடப்பாடியார். அதன் விளைவு, பன்னீரைப் பணிந்துபோகச் சொல்லி, டெல்லியில் இருந்தே உத்தரவு வரும் நிலை ஏற்பட்டது. நடைபெறும் ஆட்சி, அம்மாவின் ஆட்சி  என்று மேடைதோறும் எடப்பாடி தரப்பினர் முழங்கிவந்தாலும், மக்களுக்கு நன்றாகத் தெரிந்தே இருந்தது, ''இது அம்மாவின் அரசு அல்ல... மோடியின் அரசு” என்று. 21 மாநிலங்களில் பி.ஜே.பி நேரடியாக ஆட்சி செலுத்தும் நிலை இருக்கிறது. அதோடு 22-வது மாநிலமாக, மறைமுகமாக பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது எனச் சொல்லப்படும் வேளையில், அதற்குத் தகுந்தாற்போல் மத்திய அரசின் நடவடிக்கைகள் எதையெல்லாம் ஜெயலலிதா எதிர்த்தாரோ, அதையெல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எடப்பாடி தலைமையிலான அம்மாவின் அரசு. ஆனால், இது எல்லாம் காவிரி குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரைதான். 

எடப்பாடி பழனிசாமி

காவிரி விவகாரம் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால், எதிலும் மோடியை தாஜா செய்தால் மக்கள் புரட்சி வெடித்துவிடும் என்ற அச்சம் தமிழகத்தை ஆளும் தரப்புக்கு ஏற்பட, அதன்விளைவாக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் 20 நாள்களுக்கும் மேலாக அவையை நடத்த முடியாத அளவுக்குப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவே மோடியை முகம்சுளிக்க வைத்தது. அதன்பிறகு, மத்திய அரசுக்கு எதிராக மேலும் சில வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தது எடப்பாடி அரசு. குறிப்பாக, காவிரி விவகாரத்தில் மேல்முறையீடு செய்தது, மத்திய அரசு குறித்து சிலர் வெளிப்படையாக விமர்சனம் செய்தது போன்றவை மோடிக்கு உறுத்தலை ஏற்படுத்தியது. காவிரி, நியூட்ரினோ போன்றவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களைத் தமிழக அரசு வேண்டுமென்றே கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியது. 

எடப்பாடி அரசைக் கட்டுப்படுத்தத்தான் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநராக நியமனம் செய்தது மத்திய அரசு. ஆனால், அவர்மீது எழுந்த பாலியல் குற்றசாட்டை மாநில உளவுப் பிரிவு போலீஸாரே பூதாகரமாக்கி மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார்கள் என்ற  எண்ணம் மத்திய அரசிடம் உள்ளது. மேலும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் மத்திய அரசுக்கு அளித்த ஃபைலில் மாநில அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்லியுள்ளார். இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டபிறகுதான், அ.தி.மு.க-வை நாம் தாங்கிப்பிடிப்பது நமக்கு நல்லதல்ல என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. தமிழகத்தில் பி.ஜே.பி. கூட்டணிக்குச் சரியான சாய்ஸ் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என்று முடிவுசெய்து, தங்களது பிரதிநிதியாகக் குருமூர்த்தியை வைத்து முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. அந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட நம்பிக்கைதான் அ.தி.மு.க ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டது. 

அ.தி.மு.க ஆட்சியே பெரும்பான்மையில்லாத ஆட்சியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது 111 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே அந்தக் கட்சியில் உள்ளனர். அதேபோல், அமைச்சர்கள்மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. அவர்களைக் கண்டும்காணாமல் விட்டுக்கொண்டிருந்த மத்திய அரசு, இனி சட்ட நடவடிக்கைக்குப்  பச்சைக்கொடி காட்டிவிட்டது. அதன் முதல்படியே குட்கா வழக்கை சி.பி.ஐ. கையில் ஒப்படைத்தது. விஜயபாஸ்கர்மீது ஏற்கெனவே மத்திய அரசுக்குப் பல்வேறு புகார்கள் சென்ற நிலையில், அவரை முதல் சாய்ஸாகத் தேர்ந்தெடுத்துள்ளது. சி.பி.ஐ. விசாரணை என்றால் மத்திய அரசின் விசாரணை வட்டத்தில் இனி வரப்போகிறார் விஜயபாஸ்கர். அவரிடமிருந்தே, மேலும் சில அமைச்சர்களுக்கு வலைவிரிக்க முடிவு செய்துள்ளது சி.பி.ஐ. அதேபோல், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 11 பேர் குறித்து தி.மு.க-வின் சக்கரபாணி போட்ட வழக்கும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரின் வழக்கும் விசாரணை முடிந்தும் தீர்ப்பு சொல்லப்படாமல் இருந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் கருத்துக் கேட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், குட்கா வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட மறுதினமே, 11 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பும் வரும் என்று அறிவிப்பு வெளியானது (அது இன்று மதியம் வெளியாக இருக்கிறது).

விஜயபாஸ்கர்

இந்த 11 எம்.எல்.ஏ-க்கள் தீர்ப்பு, ஆளும் தரப்புக்கு எதிராகவே வரும் என்கிறார்கள். அப்படி வந்தால், தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லாமல் போய்விடும். அப்போது பெரும்பான்மை இழந்த அரசாக எடப்பாடி அரசு மாறிவிடும். எந்தச் சிக்கலும் இல்லாமல் ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளது மத்திய அரசு. சமீபத்தில் தினகரனுக்கு நெருக்கமானவர் டெல்லியில் முக்கிய பி.ஜே.பி தலைவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போதே இந்தத் திட்டத்தை மேலோட்டமாகச் சொல்லியுள்ளது பி.ஜே.பி தரப்பு. இதை மோப்பம் பிடித்த எடப்பாடியார், உடனே திவாகரன் மூலம் தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களை இழுக்கப் பார்த்தார். இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பு வந்தவுடன் ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி மனுக் கொடுக்க உள்ளார்கள். பெரும்பான்மை இல்லாத எடப்பாடி அரசு, கண்டிப்பாக அதில் தோல்வி கண்டுவிடும். அதன்பிறகு, ஆறு மாதம் ஆளுநர் ஆட்சியை நடத்தி நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத்துக்கும் தேர்தலை நடத்திவிடலாம் என்று முடிவு செய்துள்ளது மத்திய அரசு. 

இதில், தமிழக அமைச்சர்கள் யாரும் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கிவிடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி ஏற்படுத்தி ஒரு கலகத்தை அனைத்து அமைச்சர்கள் மத்தியிலும் உண்டாக்கிவிட்டது. இனி, இந்த ஆட்சி நீடிக்க நாங்கள் விரும்பவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்ல ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு. அதைக் கண்டு ஆட்டம்காணத் தொடங்கிவிட்டது மாநில அரசு.