2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை உலக டி20 போட்டியாக மாற்றம்: ஐ.சி.சி அறிவிப்பு | 2021 Champions Trophy changed in to T20 world cup

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (27/04/2018)

கடைசி தொடர்பு:14:50 (27/04/2018)

2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை உலக டி20 போட்டியாக மாற்றம்: ஐ.சி.சி அறிவிப்பு

இந்தியாவில் நடக்க உள்ள 2021 சாம்பியன்ஸ் கோப்பை உலக டி20 போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது. இதன்மூலம் 8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

'இந்தியாவில் நடக்க உள்ள 2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை, உலக டி20 போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது' என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இதன்மூலம், 8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொல்கத்தாவில், ஐசிசி வாரியக் கூட்டம் 5 நாள்களாக நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, தலைமை நிர்வாகி டேவ் ரிச்சர்ட்சன் கூறுகையில், ''2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிகள், 16 நாடுகள் பங்கேற்கும் உலக டி-20 போட்டிகளாக மாற்றப்படுகின்றன. இதற்கு, உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒரு மனதாக சம்மதம் தெரிவித்துள்ளன. முதலில், இந்திய கிரிக்கெட் வாரியம் ( பிசிசிஐ) இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர், ஆதரவாக வாக்களித்தது.

இதன்மூலம், 2 டி20 உலகப்கோப்பை போட்டிகள் இரு ஆண்டுகளில் நடக்கின்றன. 2020-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிலும், 2021-ம் ஆண்டு இந்தியாவிலும் போட்டி நடக்கின்றன. மேலும், 2019, 2023-ம் ஆண்டுகளில் உலகப் கோப்பை ஒருநாள் போட்டிகள் நடத்தப்படும். இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிகள் முடிவுக்குவருகின்றன.

உலகப்கோப்பை போட்டிகளைப் போன்றே சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிகளும் உள்ளன. வருங்காலத்தில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகப்கோப்பை மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டி லீக் நடைபெறும். லாஸ் ஏஞ்சல்ஸில் 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற வாய்ப்புள்ளது. இதன் ஒரு பகுதியாக, 104 உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச டி20 அந்தஸ்து தரப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. எனவே, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளோம். மேலும், இது தொடர்பாக ஒலிம்பிக் கவுன்சிலிடம் பேசிவருகிறோம்

104 உறுப்பு நாடுகளுக்கும், சர்வதேச அளவில் சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்படுகிறது. இதன்மூலம், அர்ஜென்ட்டினா பாப்புவா நியூகினியா நாடுகள் மோதும் போட்டிக்கும் சர்வதேச அந்தஸ்து கிடைத்துள்ளது. ஆண்கள், பெண்கள் தர வரிசை 2018 அக்டோபர் மற்றும் 2019 மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும்.

வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மகளிர் அணிகள் பங்கேற்கும் அனைத்து டி20 போட்டிகளுக்கும் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்படும். இதே போன்று 2019-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் ஆண்களுக்கும் கொண்டுவரப்படும். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், இதில் சிக்கல் உள்ளது. இரு நாடுகளில், வாரியங்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். அவர்கள் ஒப்புதல் அளிப்பது பெரிய விஷயம்'' என்றார்.