வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (27/04/2018)

கடைசி தொடர்பு:15:17 (27/04/2018)

எஸ்.வி.சேகரின் ஃபேஸ்புக் பதிவும்...119 எழுத்தாளர்களின் கூட்டறிக்கையும்!

பி.ஜே.பி-யைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் அண்மைக்காலமாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பி.ஜே.பி. மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தொடங்கி ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் என பி.ஜே.பி-யினரின் இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் கவர்னர் தட்டிக்கொடுத்தது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அந்தப் பத்திரிகையாளர் தன் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் நடந்த சம்பவம் பற்றி பதிவிட்டு, கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக நடிகரும், பி.ஜே.பி. உறுப்பினருமான எஸ்.வி.சேகர் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தும் விதமான கருத்துகளை அவருடைய முகநூல் பக்கத்தில் ஷேர் செய்துவிட்டு, சிறிது நேரத்தில் அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.

எஸ்.வி.சேகர், பி ஜே பி

எஸ்.வி.சேகரின் செயலைக் கண்டித்து, பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு அவருடைய வீட்டை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.வி. சேகருக்கு எதிராக சென்னை மட்டுமல்லாது பல்வேறு இடங்களிலும் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தினர். 

இந்நிலையில், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரும் சேர்ந்து எஸ்.வி. சேகரைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டனர். பத்திரிகையாளர் விஜயஷங்கர் ராமச்சந்திரன், பச்சைத் தமிழகம் கட்சித்தலைவர் சுப. உதயகுமார், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான தமிழ் மகன், வழக்கறிஞர் அருள்மொழி, பேராசிரியர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் மற்றும் நடிகர் கவிதா பாரதி, எழுத்தாளர்கள் பா. ஜீவசுந்தரி, ஜமாலன், பெருமாள் முருகன், கரன் கார்க்கி, அழகிய பெரியவன், யூமா வாசுகி, ராஜன் குறை, கவிஞர்கள் யாழன் ஆதி, கலாப்ரியா உள்பட 119 பேர் கூட்டாகச் சேர்ந்து நேற்று (26.4.18) அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையை எழுத்தாளர்கள் சல்மா, தமயந்தி ஆகியோர் சென்னையில் வெளியிட்டனர். அந்த அறிக்கை விவரம்:

''பெண் வெறுப்பை உமிழும் தமிழக பா.ஜ.க தலைவர்கள்

தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே அசாத்தியமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. பொதுஅமைதியைக் குலைக்கும் நோக்கத்துடன், தமிழ்நாட்டின் அத்தியாவசியமான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திருப்பும் எண்ணத்துடன் பா.ஜ.க-வைச் சேர்ந்த சில தலைவர்கள் செயல்படுகிறார்களோ என்கிற ஐயம் எங்களுக்கு எழுந்திருக்கிறது.

பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும், அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.வி சேகரும் பெண் வெறுப்புக் கருத்துகளை அண்மையில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருபவர்களில் முதன்மையானவர் ஹெச்.ராஜா. தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசுவது, பத்திரிகையாளர்களை தேச விரோதிகள் என்று அழைப்பது, கவிஞர் வைரமுத்து மீது அநாகரிகமான தாக்குதல் தொடுப்பது என்று இவர் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளைச் சொல்லலாம். 

இந்த நிலையில், சமீபத்தில் தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை பதவி வகித்த மூத்தத் தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர், கவிஞர் மற்றும் அரசியல் தலைவராக இருக்கக்கூடிய கனிமொழி குறித்தும் மிக அநாகரிகமான அவதூறானக் கருத்துகளைப் பதிவுசெய்து, தன்னுடைய வன்மத்தையும் பெண் வெறுப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஹெச். ராஜா. அதேபோல, ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை ஆளுநர் தட்டிய சர்ச்சையையொட்டி, முகப்புத்தகத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருக்கும் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய மிக மோசமான, கீழ்த்தரமான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

ஹெச். ராஜா கள்ளக்குழந்தை என்ற வார்தையைப் பயன்படுத்தியதன் வழியே குழந்தைகள் மீதான உரிமைகளுக்கு எதிராகப் பேசியிருக்கிறார். தனது சர்ச்சைப் பேச்சு, பதிவுகளின் மூலம் பெண் மீதான குறிப்பாக பொதுவெளியில் சுதந்திரமாக இயங்கக்கூடிய பெண் மீதான கட்டற்ற வெறுப்பையும், காழ்ப்பு உணர்வையும் அவர்கள் இருவரும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

'படித்துப் பார்க்காமல் பகிரப்பட்ட பதிவு' என்று எஸ்.வி.சேகர் சொல்வது பொறுப்பற்ற, தப்பித்துக்கொள்ளும் உத்தி என்பது ஒருபுறம் இருந்தாலும் இருவருமே தங்களின் ஆழ்மன பெண்வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த இருவரும் சமீபகாலங்களில் வெளிப்படுத்தி வரும் அநாகரிகமான கருத்துகளுக்கு தமிழ் எழுத்தாளர்களாக எதிர்வினையாற்ற வேண்டிய அறக்கடமை எங்களுக்கு இருக்கிறது. அவர்களின் கருத்துகளுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்ய விரும்புகிறோம். கனிமொழி குறித்த கருத்துக்காக ஹெச்.ராஜா மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், எஸ்.வி.சேகர் மீது பதியப்பட்டிருக்கும் வழக்கில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக எழுத்தாளர்களாகிய நாங்கள், இந்த அறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டின் அசலான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திருப்ப இந்தத் தலைவர்களின் உத்திகளைக் கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழக மக்கள் இவர்கள் இருவரையும் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். பெரியாரின் சுயமரியாதை நிலமான தமிழகத்தில் பெண்வெறுப்புப் பேச்சுகள் ஒருபோதும் எடுபடாது என்பதை பா.ஜ.க தலைமைக்கு இதன்மூலம் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்ளவும் விரும்புகிறோம்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்