வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (27/04/2018)

கடைசி தொடர்பு:17:04 (27/04/2018)

இன்று தாய்மாமன்... நாளை சித்தி... தினகரன் குறித்து ஆரூடம் சொன்ன அமைச்சர் தங்கமணி

தினகரன் பதவி வெறிக்காக தூணாக இருந்த தாய்மாமன் திவாகரனை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். நாளை சசிகலாவையும் நீக்குவார் என அமைச்சர் தங்கமணி பரபரப்பாக பேசினார்.

''தூணாக இருந்தவர் திவாகரன் அவரையே கட்சியைவிட்டு நீக்கிவிட்டார். நாளைக்கு சசிகலாவையும் நீக்குவார். முதல்வர் பதவி வெறிக்காகத் தினகரன் இப்படி நடந்துகொள்கிறார். இன்று தாய்மாமனுக்கு ஏற்பட்ட நிலைமை  நாளை சித்திக்கும் ஏற்படும்'' என அமைச்சர் தங்கமணி பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கலந்துகொண்டனர்.

இதற்குப் பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என நிர்வாகிகளுக்கு வைத்திலிங்கம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்டி இது பொதுக்கூட்டம் இல்லை குட்டி மாநாடு என அனைவரையும் பேச வைக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, 'ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஸ்டாலினைப் பார்த்து சிரிச்சார். நமக்கு எதிராகச் செயல்படுகிறார் எனச் சொன்னார்கள். அதனால்தான் அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நாங்கள் சம்மதித்தோம். அதன் பிறகுதான் தெரிந்தது தினகரன், முதல்வர் பதவியில் அமர்வதற்காக இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று.

அதன் பிறகு, ஸ்டாலினிடம் தினகரன் பேசிக்கொண்டிருந்தார். இது தெரிந்து நாங்கள் அனைவரும் கேட்டோம். எனக்கு எல்லோரும் நண்பர்கள். அதனால்தான் ஸ்டாலினிடம் பேசினேன். மேலும், அவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் இல்லை எனத் தினகரன் தெரிவித்தார். அதன் பிறகுதான் நாங்கள் தனியாகச் செயல்பட முடிவெடுத்தோம். லண்டனில் தினகரனுக்குச் சொந்தமான ஹோட்டல் இருக்கிறது. அதில் 10 வருடங்களுக்கு முன்பே முதல்வர் பதவியை அடைவதற்காகத் தினகரன் ரகசியமாக ஆலோசனை நடத்தினார். இது உளவுத்துறை மூலம் ஜெயலலிதாவுக்குத் தெரியவந்த பிறகு, தினகரனைக் கட்சியைவிட்டே ஒதுக்கி வைத்தார்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருக்கும்போது நாங்கள் யாரும் பார்க்கவில்லை. ஆளுநர் மற்றும் மத்திய அரசிலிருந்து வந்த முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்கூட நோய்த் தொற்று ஏற்படும் எனப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. பின்னர் தான், எங்களுக்குத் தெரிந்தது முதல்வர் பதவிக்காக அவர்கள் நடத்திய நாடகம் என்று. தூணாக இருந்த திவாகரனையே கட்சியைவிட்டு நீக்கிவிட்டார் தினகரன். நாளை சசிகலாவையும் நீக்குவார் முதல்வர் பதவியின் வெறியில்தான் இப்படியெல்லாம் செய்கிறார். இன்றைக்கு தாய்மாமனுக்கு ஏற்பட்டது நாளைக்கு சித்திக்கும் நடக்கும்'' எனப் பரபரப்பாகப் பேசினார்.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில், தண்ணீர் அடிச்சு தண்ணீர் விலகாது எனச் சேர்ந்துகொண்டனர். இப்போது முதல்வர் எடப்பாடியை ஆதரிக்கிறேன் எனச் சொல்கிறார் திவாகரன். அதை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அவர் வந்தாலும் அ.தி.மு.க ஒரு கடல். அதில் வருபவர்களை ஏன் வருகிறீர்கள் எனக் கேட்பதும் இல்லை; போகும்போது ஏன் போகிறீர்கள் என்று கேட்பதும் இல்லை'' என்று பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க