வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (27/04/2018)

கடைசி தொடர்பு:16:15 (27/04/2018)

'தகுதிநீக்கம் செய்ய முடியாது!’ - ஓ.பன்னீர்செல்வம் வழக்கில் உயர் நீதிமன்றம்

'ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்புக்கு எதிராகப் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். அப்போதைய ஓ.பி.எஸ் அணியில் 11 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். சசிகலா ஆதரவாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வரானார். ஆனால், அவரின் பக்கம் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் இல்லை என்றும், அதனால் ஆட்சி அமைக்க முடியாதென்றும் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின. இதையடுத்து, சட்டமன்றத்தில் பழனிசாமி அரசு கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராகப் பன்னீர்செல்வம் அணி வாக்களித்தது. அ.தி.மு.க-வில் இருந்துகொண்டு முதல்வருக்கு எதிராகச் செயல்பட்ட பன்னீர்செல்வம் அணியின் 11 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இதையடுத்து, பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிகள் இணைந்தன. அதன்பின் தினகரன் அணி உருவானது. தினகரனுக்கு 19 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். 19 எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று அப்போதைய பொறுப்பு ஆளுநரிடம் புகார் தெரிவித்தனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்துக்கொண்டு இப்படிச் செய்வது சட்டவிரோதம் என்று அ.தி.மு.க கொறடா, சபாநாயகரிடம் தெரிவித்தார். இதையடுத்து, தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். 

தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களும் எதிர்க்கட்சியினரும் நீதிமன்றத்தை நாடினர். மேலும், 'ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்டதால், அவர்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று வழக்கு தொடரப்பட்டது. தினகரன் தரப்பு மற்றும் தி.மு.க தரப்பு வழக்குகளைத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து முடித்து, 27.4.2018 (இன்று) பிற்பகல் 2.15 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. 

இந்நிலையில் ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கக் கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு 'ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. சபாநாயகர் அதிகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தகுதிநீக்கி உத்தரவிட முடியாது. சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். சபாநாயகர் பாரபட்சமாக நடந்துகொள்ளும்போது, உயர் நீதிமன்றம் தலையிடலாம் என்ற தி.மு.க. தரப்பு வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க