'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தாமதமாவது இதனால்தான்!’ - ஹெச்.ராஜா சொல்லும் காரணம்

கர்நாடகாவும் கேரளாவும் அவர்கள் தரப்பில் ஒரு உறுப்பினரைக் நியமிக்காததால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் ஆகிறது என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கோவையில் தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா

கோவை மாவட்டப் பா.ஜ.க தலைவர் நந்தகுமார் இல்லத்துக்கு வருகை தந்த ஹெச்.ராஜா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "காவிரி விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் 9 பேர் கொண்ட குழுவில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கேரளாவும் கர்நாடகாவும் இன்னும் அவர்கள் தரப்பிலிருந்து பிரதிநிதியை நியமிக்கவில்லை. அதனால், அவர்கள் பிரதிநிதியை நியமிக்க அவகாசம் கொடுத்து மேலும் இரண்டு வார கால அவகாசத்தை மத்திய அரசு கேட்டிருக்கலாம். அப்படியும் அவர்கள் தங்கள் பிரதிநிதிகளை அவர்கள் நியமிக்கவில்லை என்றால் நீதிமன்றம் நியமிக்கச் சொல்லி உத்தரவுப் பிறப்பிக்கும். அப்போது மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்.

காவிரி விவாகரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை எடுக்கும். கர்நாடகத் தேர்தலுக்கும் காவிரிக்கும் சம்பந்தமில்லை.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகதான் தி.மு.க தற்போது அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்களா? என்றார், 

மேலும் அவர் கூறுகையில், 'கோவையில் பி.ஜே.பி மாவட்டத் தலைவர் நந்தகுமார் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சென்னையில் ஐ.பி.எல் நடந்தபோது தேச விரோதிகள், காவல்துறையைக் தாக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவதாக இங்குள்ள திராவிடர்கள் சித்திரிக்கிறார்கள். தமிழகத்தில் வன்முறையை ஏற்படுத்தத் தலைமை ஏற்கும் கட்சியாக எதிர்க்கட்சி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மக்களைப் பாதிக்கும் பிரச்னைக்கு இங்கு யாரும் போராடுவதில்லை. மத்திய அரசுக்கும் பக்கத்து மாநிலத்துக்கும் இலங்கைக்கு எதிராகவும்தான் இங்கு போராட்டம் நடக்கிறது. குறிப்பாக, இப்போது இந்துக்களுக்கு எதிராகப் பேசுவது பேஷனாகிவிட்டது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை மோசமாகச் செயல்பட்டு வருகிறது. இந்துக்களைப் பேக் செய்து அனுப்பக்கூடிய ஏஜென்சியாகத் திராவிடர்கள்  செயல்படுகிறார்கள். மேலும், சைபர் சைக்கோக்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் சொன்னதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை’ என்றார்.

எஸ்.வி சேகர்மீது பா.ஜ.க நடவடிக்கை எடுக்கும் எனத் தமிழிசை சொன்னார். ஆனால், இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப்  பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "பத்திரிகையாளர்கள் பற்றி தவறுதலாக சமூகவலைதளங்களில் எஸ்.வி.சேகர் பதிவிட்டது தவறானது. அவர்மீது சிலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் அதுபற்றி நீதிமன்றம் முடிவு எடுக்கும் என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!