''சொகுசான சாலைக்காக.. 200 வருட மரங்களைக் காவு கொடுப்பதா?" சிறுவாணி விவகாரத்தில் சமூக ஆர்வலர்கள் | Story about Coimbatore Siruvani road Extension work

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (27/04/2018)

கடைசி தொடர்பு:18:48 (27/04/2018)

''சொகுசான சாலைக்காக.. 200 வருட மரங்களைக் காவு கொடுப்பதா?" சிறுவாணி விவகாரத்தில் சமூக ஆர்வலர்கள்

1927-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், “இந்த மாகாணத்திலேயே மோசமான தண்ணீர் எதுவென்றால் அது கோயம்புத்தூரின் தண்ணீர்தான். இதனால், மக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது” என தெரிவித்திருந்தது. அப்போது, சிறுவாணி குடிநீர் இல்லை. கோவையின் தண்ணீர் பஞ்சம் என்பது 1880 முதலே இருந்து வந்தது. சுமார் 40 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகுதான், கோவை மக்களுக்கு சிறுவாணி தண்ணீர் கிடைத்தது. அன்று முதல் கோவையின் பெருமையாகவும், அடையாளமாகவும் இருப்பது சிறுவாணிதான். சிறுவாணி மட்டுமல்ல, சிறுவாணி சாலையும் அவ்வளவு அழகு. இயற்கை போர்வையால் போர்த்தப்பட்ட, அந்த சாலையில் பயணித்தாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

''சொகுசான சாலைக்காக.. 200 வருட மரங்களைக் காவு கொடுப்பதா?

1927-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், ''இந்த மாகாணத்திலேயே மோசமான தண்ணீர் எதுவென்றால், அது கோயம்புத்தூரின் தண்ணீர்தான். இதனால், மக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தது. அப்போது, சிறுவாணி குடிநீர் இல்லை. கோவையின் தண்ணீர்ப் பஞ்சம் என்பது 1880 முதலே இருந்துவந்தது. சுமார் 40 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகுதான், கோவை மக்களுக்குச் சிறுவாணி தண்ணீர் கிடைத்தது. அன்றுமுதல் கோவையின் பெருமையாகவும், அடையாளமாகவும் இருப்பது சிறுவாணிதான். சிறுவாணி மட்டுமல்ல, சிறுவாணிச் சாலையும் அவ்வளவு அழகு. இயற்கைப் போர்வையால் போர்த்தப்பட்ட, அந்தச் சாலையில் பயணித்தாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

கோவையின் அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை எனப் பிரதான சாலைகள் அனைத்திலும், மரங்கள் இருந்த இடங்களில் கட்டடங்கள் குடியேறியுள்ள நிலையில், சிறுவாணிச் சாலை மட்டும்தான் இயற்கை அடையாளத்துடன் இருந்துவருகிறது. அதனால்தானோ என்னவோ, தற்போது சிறுவாணிச் சாலையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

இதற்காக, 83 மரங்களை வெட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. காளம்பாளையம் டு இருட்டுப்பள்ளம் வரை 15 கி.மீ தூரத்துக்கு, 7 மீட்டரிலிருந்து 10 மீட்டருக்குச் சாலை அகலப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் குறைவாகவும், இயற்கை வளம் மிகுதியாகவும் இருந்ததுதான் சிறுவாணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். ஆனால், நாளடைவில் கோவை குற்றலாம், ஈஷா யோக மையம் போன்றவை வந்தன. மேலும், காருண்யா போன்ற கல்வி நிறுவனங்களும் காலடி எடுத்துவைத்தன. பின்னர், சில ரிசார்ட்டுகளும் முளைத்தன. இதனால், மனிதர்கள் அதிகமாகவும், இயற்கை வளம் குறைவாகவும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வார இறுதி நாள்கள் மற்றும் பண்டிகை தினங்களில், கோவை மக்களின் முதல் சாய்ஸ் சிறுவாணிச் சாலைதான். பண்டிகைக் காலத்திலும் சரி, சாதாரணக் காலகட்டத்திலும் சரி... பெரிய அளவுக்குப் போக்குவரத்து நெரிசலில் சிறுவாணிச் சாலை சிக்கியதாகப் புகார் இல்லை. குறிப்பாக, ஈஷா போன்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு மாற்றாக, நரசிபுரம் சாலையும் இருக்கிறது. இந்நிலையில், அந்தப் பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே சாலை விரிவாக்கம் செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

சிறுவாணி சாலை

மேலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான நிலம் சாடிவயல் அருகே உள்ளது. இதனால்கூட, சாலை விரிவாக்கம் செய்யப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. சிறுவாணிச் சாலையில் 726 மரங்கள் உள்ளன. அவற்றில், 146 மரங்களை வெட்ட வருவாய்த் துறையிடம், நெடுஞ்சாலைத் துறை அனுமதி கேட்டது. இதையடுத்து, சர்வே செய்த வருவாய்த் துறை, 83 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ளது. இதனிடையே, சிறுவாணிச் சாலையில் 40 மரங்களை வெட்டினாலே சாலையை விரிவாக்கம் செய்துவிடலாம் எனச் சொல்லும் சில சூழலியல் ஆர்வலர்கள், ஆனால் அதற்கும்கூட அவசியமில்லை என்கின்றனர்.

சையதுஇதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் சையது கூறுகையில், ''சாலை விரிவாக்கப் பணியின்போது, ஒருமரம் வெட்டப்பட்டால், அதற்குப் பதிலாக 10 மரங்கள் நடவேண்டும் என்று நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. ஆனால், ஒரு மரம்கூட நடப்படுவதில்லை. புதிதாக மரம் வைத்தாலும், அது நன்கு வளர, குறைந்தது 200 ஆண்டுகள் ஆகும். நாம் மரங்களைத்தான் சுவாசிக்க முடியும். சாலைகளையோ, கட்டடங்களையோ சுவாசிக்க முடியாது. அந்தப் பகுதி மக்கள்கூட, 'மரங்களால் எங்களுக்குப் பிரச்னை இல்லை; மரங்களை வெட்டினால், நாங்களே போராட்டத்தில் இறங்குவோம்’ என்றுதான் சொல்கின்றனர். மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக, இவர்கள் சாலைக்குக் குறுக்கே இருக்கும் மரங்களின் அருகே, ஸ்பீடு பிரேக்கர்களை அமைக்கலாம். அதைவிட்டுவிட்டு, மரங்களை வெட்டுவது இதற்குத் தீர்வாகாது. எத்தனை சொத்துகளைச் சேர்த்துவைத்தாலும், அடுத்த தலைமுறையினருக்கு நாம் இயற்கையைத்தான் கொடுக்க முடியும். மரங்கள் இல்லையேல், இந்த உலகின் இயக்கமே நின்றுவிடும்” என்றார்.

இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது, ''கடந்த 6 மாதங்களாகவே இந்தப் பணிகள் நடந்துவருகின்றன. 40 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன. 83 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கியுள்ளோம். ஆனால், தற்போதுவரை ஒரு மரத்தைக்கூட நாங்கள் வெட்டவில்லை. சிறுவாணிச் சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை. போக்குவரத்து அதிகரித்ததால், சாலையை நாங்கள் விரிவாக்கம் செய்யாமல் இருக்க முடியாது. இந்த ஒவ்வொரு மரமும், அடுத்த தலைமுறைக்கு நாம் வழங்கும் பரிசு. எனவே, முடிந்த அளவுக்கு மரங்களை வெட்டாமல், சாலையை விரிவாக்கம் செய்ய முயற்சி செய்து வருகிறோம்” என்றனர்.

வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ''முதலில் 146 மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி கேட்டனர். நாங்கள் சர்வே செய்து 83 மரங்கள் வெட்ட அனுமதி கொடுத்துள்ளோம். பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மரங்களைப் பாதுகாப்பதற்காக மீண்டும் சர்வே செய்யக்கூடத் தயாராக இருக்கிறோம்” என்றனர்.

இயற்கையுடன் இணைந்து செல்வதுதான் வளர்ச்சி என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்