வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (27/04/2018)

கடைசி தொடர்பு:18:03 (27/04/2018)

ரூ.250 கோடி சிட் பண்ட் மோசடி! - நட்சத்திர ஹோட்டல்களில் கைதான நிர்வாக இயக்குநர்கள்

தமிழகம் முழுவதும் சிட்பண்ட்ஸ் நடத்தி ரூ.250 மோசடி செய்த நிர்வாக இயக்குநர், இரண்டு இயக்குநர்கள் என மூன்று பேரை சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் போலீஸார் கைதுசெய்தனர். 

 மோசடி

தமிழகம் முழுவதும் திரிபுரா சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் தனியார் நிதி  நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தில் கடலூர், திருச்சி, சிதம்பரம் என மொத்தம் 89 கிளைகள் உள்ளன. இதுதவிர ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் என மொத்தம் 344 கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமானவர்கள் சீட்டு போட்டிருந்தனர். மேலும், பணத்தையும் டெபாசிட் செய்திருந்தனர். இந்தநிலையில் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் தரப்பில் பணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், வாடிக்கையாளர்களுக்கும் நிறுவன ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் சில கிளைகள்  மூடப்பட்டன. பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் ஆத்திரத்தில் அலுவலகங்களைச் சூறையாடினர்.

இதையடுத்து பண மோசடி குறித்து தமிழகம் முழுவதும் புகார்கள் கொடுக்கப்பட்டன. பல  கோடி ரூபாய் ஏமாற்றியதால் இந்த வழக்கு விசாரணை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸுக்கு மாற்றப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி சுனில்குமார் சிங் உத்தரவின் பேரில் எஸ்.பி ரம்யாபாரதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 400-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.12 கோடிக்கு மேல் ஏமாந்துள்ளதாகப் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் இந்த நிறுவனத்தை நடத்திய நிர்வாக இயக்குநர் கிருஷ்ணபிரசாத், அவருடைய மனைவியும் இயக்குநருமான சுமன்னா, இன்னொரு இயக்குநர் வேணு உட்பட பலரை போலீஸார் தேடி வந்தனர். வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்கள் தரப்பில் போலீஸாரிடம் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. அதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் பணம் கொடுக்கப்படவில்லை. 

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, நாவலூரில் குடியிருக்கும் அவர்களது வீடுகளுக்குப் போலீஸார் சென்றனர். ஆனால், வீடுகள் பூட்டப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவாக இருந்தனர். நிர்வாக இயக்குநர் கிருஷ்ணபிரசாத், அவர் மனைவி சுமன்னா ஆகியோர் விமான நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தலைமறைவாக இருக்கும் ரகசிய தகவல் போலீஸுக்குக் கிடைத்தது. உடனடியாகப் போலீஸ் டீம் அங்கு சென்று அவர்களைக் கைது செய்தது. அதுபோல கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இயக்குநர் வேணு இருக்கும் தகவல் கிடைத்து அவரை போலீஸார் கைதுசெய்தனர். இன்னும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "கர்நாடகாவைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத். இவர்தான் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார். இந்த நிறுவனத்தில் ஏழு பேர் இயக்குநர்களாக உள்ளனர். அதில் ஒருவர் கிருஷ்ணபிரசாத்தின் மனைவி சுமன்னா. கேரளாவைச் சேர்ந்த வேணுவும் ஒரு இயக்குநர். இவர்கள் மூன்று பேரை கைதுசெய்துள்ளோம். இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக ரூ.800 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. ரூ.250 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் கொடுக்கலாம். மேலும், யாரும் இனி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்" என்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் சைதாப்பேட்டை அலுவலகத்தைத் தொடர்புகொண்டபோது, எந்தவித தகவலும் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்துவிட்டனர்.