வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (27/04/2018)

கடைசி தொடர்பு:20:40 (27/04/2018)

'முக்கடல் அருகே புதிய அணை அமைக்க நடவடிக்கை!’ - அ.தி.மு.க. எம்.பி தகவல்

நாகர்கோவில் நகரத்துக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணைக்கு அருகே புதிய அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் தெரிவித்தார்.

நாகர்கோவில் நகரத்துக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணைக்கு அருகே புதிய அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக மாநிலங்களவை எம்.பி விஜயகுமார் தெரிவித்தார்.

முக்கடல் அணையில் ஆய்வு

நாகர்கோவில் நகரத்துக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது முக்கடல் அணை. 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையால் நாகர்கோவில் நகரத்துக்கான குடிநீர் தேவையை முழுவதுமாகப் பூர்த்தி செய்ய இயலவில்லை. இதையடுத்து அணையின் உயரத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த (தமிழ்நாடு வாட்டர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி) பொறியாளர்கள் சுந்தரேசன், டாக்டர் சக்தி வடிவேல் ஆகியோர் முக்கடல் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் கூறுகையில், "நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை தற்போது 25 அடியாக உள்ளது. இது முந்தைய மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டப்பட்டது. இப்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் அணையின் உயரத்தை அதிகரிப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த அணையின் உயரத்தை மேலும் 20 அடி அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளேன். 20 அடி உயர்த்தினால் குடிநீர் அதிகமாகச் சேமிக்க முடியும். அல்லது முக்கடல் அணை அருகிலேயே புதிய அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது. முக்கடல் அணைக்கு மேலே தடவையாறு பகுதியில் செக்டேம் உள்ளது. சேதமடைந்து காணப்படும் அந்தச் செக்டேமை சீரமைத்து அங்குள்ள தண்ணீரை பைப் மூலம் முக்கடலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியும் நடக்கிறது. இதுதவிர வீணாகக் கடலில் கலக்கும் உலக்கை அருவி தண்ணீரையும் பைப் மூலம் முக்கடல் அணைக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோடையில் நாகர்கோவில் நகராட்சியின் 52 வார்டுகளுக்கும் ஷிப்ட் முறையில் தண்ணீர் வழங்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்" என்றார்.