'பானையே இல்லாமல் தண்ணீர் பந்தல் எதற்கு?’ - அ.தி.மு.க-வினரிடம் கேள்வி எழுப்பும் மக்கள் | There is no water in the shelter that opened by admk cadres alleges tthoothukudi people

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (27/04/2018)

கடைசி தொடர்பு:22:00 (27/04/2018)

'பானையே இல்லாமல் தண்ணீர் பந்தல் எதற்கு?’ - அ.தி.மு.க-வினரிடம் கேள்வி எழுப்பும் மக்கள்

தூத்துக்குடியில் சாலை ஓரங்களில் அ.தி.மு.க-வினர் வைத்துள்ள நீர் - மோர் பந்தல்களில் மண்பானை இன்றி பந்தல் மட்டும்  வெறுமையாக இருப்பதால் தாகத்தோடு வருபவர்கள் ஏமாந்து செல்கின்றனர்

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே சாலை ஓரங்களில் நுங்கு, பதனீர், இளநீர், கரும்புச்சாறு, சர்பத், கூழ், மோர் , தர்பூசணி ஆகியவை விற்பனை செய்யும் கடைகள் முளைத்திருக்கும். இந்தக் கடைக்காரர்களுக்கு கோடைக்காலம்தான் விற்பனை சூடுபிடிக்கும் பொற்காலம். இதே நேரத்தில் எதிலும் விளம்பரம் தேடும் கட்சிக்காரர்களும் நீர் - மோர் பந்தல் அமைத்து அதில் எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர் உருவப்படம் பொறித்த பேனர்களில் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்திருக்கும் வட்டம், வார்டு பொறுப்பாளர்களின் விளம்பரத்துடன் இரண்டு அல்லது மூன்று மண் பானைகளில் தண்ணீரை நிரப்பி விழாபோல ஏற்பாடு செய்து, அதைத் திறப்பார்கள். திறப்பு விழா அன்று மட்டும் நீர் - மோர் பந்தல் என்ற பெயருக்கு ஏற்றாற்போல மோரும் தண்ணீரும் வழங்கப்படும். அடுத்த நாள் தண்ணீர் மட்டுமே இருக்கும். அதற்கு அடுத்த இரண்டு நாள்களில் வெறும் பானை மட்டுமே இருக்கும். சில பந்தல்களில் பானையும் இருக்காது.

ஒரே கட்சியில் கோஷ்டி பூசலில் அணி அணியாகச் செயல்படுவதுபோல, இது போன்ற தண்ணீர் பந்தல் அமைப்பதிலும் அவர்களது தனித்தனி அணியினரின் பந்தலையும் காண முடியும். தூத்துக்குடியில் அ.தி.மு.க-வினர் அமைத்துள்ள தண்ணீர் பந்தல்களிலும் இது போன்ற நிலை காணப்படுகிறது. 

தூத்துக்குடி அ.தி.மு.க-வைப் பொறுத்த வரையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் ஒரு அணியாகவும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ, சண்முகநாதன் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருவது ஊர் அறிந்த ரகசியம். இருவரது ஆதரவாளர்களும் தனித்தனியாக அமைத்துள்ள நீர் மோர் பந்தல்களில் மண் பானைகூட இல்லை.

சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர் தேடி வந்து பந்தலுக்குள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த ஒரு முதியவரிடம் பேசினோம், "இன்னைக்கு 4வது வெள்ளிக்கிழமை, ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்கிட்டு வெயிலோட நடந்து வந்தேன். நாக்கு வறண்டுடுச்சு. தண்ணி தாகத்தோட வந்து பார்த்தேன். பானையையே காணோம். தண்ணீரே இல்ல. அப்புறம் எதுக்கு தண்ணீர் பந்தல்? இன்னும் கொஞ்ச தூரம் நடந்தா ஒரு டீக்கடை வரும் அங்கதான் தண்ணிய குடிச்சுட்டு வீட்டைப் பார்க்க போகணும். "என்றவர் மெதுவாக நடக்க ஆரம்பித்தார். தூத்துக்குடியில் பெரும்பாலான தண்ணீர் பந்தல்கள் இதே நிலையில்தான் உள்ளது. இதுலயும் விளம்பரமா..? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க