வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (27/04/2018)

கடைசி தொடர்பு:23:00 (27/04/2018)

'பிரதமர், முதல்வரை விமர்சிக்கக் கூடாதா?’ - ஆட்சியருக்கு எதிராகக் கொந்தளிக்கும் விவசாயிகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசையும் இப்பிரச்னைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்காத தமிழக முதல்வரையும் கண்டித்து கடந்த ஒரு மாதமாகத் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் பிறப்பித்த உத்தரவு விவசாயிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலதாமதமாகிக்கொண்டே இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்தார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் நரேந்திர மோடியையும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் வன்மையாகக் கண்டிப்பதாக அவர்கள் முழக்கமிட்டார்கள். இதனால் கோபம் அடைந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ், ''பிரதமரையும் முதல்வரையும் விமர்சிப்பதை அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் கூட்டரங்கைவிட்டு வெளியே சென்று முழக்கமிடுங்கள்” என்றார். இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

‘இது ஆட்சியர் வீட்டுக்குள் நடக்கும் தனிப்பட்ட கூட்டமல்ல. இது எங்களைப் போன்ற விவசாயிகளின் குறைகளைத் தீர்க்குறதுக்காக நடக்குற கூட்டம். இன்னும் சொல்லப்போனால், மக்கள் வரிப்பணத்துலதான் இதுபோன்ற கூட்டங்களே நடத்தப்படுது. காவிரி தண்ணீர் வராததால எங்களோட விவசாயம், குடிநீர் எல்லாமே பாதிக்கப்படுது. இந்தப் பாதிப்புகளுக்கு காரணமான பிரதமரையும் முதல்வரையும் கண்டித்து முழக்கம் போடுறது எப்படி தவறாகும்? ஜனநாயக நாட்டுல இதுக்குக்கூட அனுமதி கிடையாதா. விவசாயிகளுக்கு ஒரு பிரச்னைனா, அதுக்கு காரணமான அதிகாரிகளை, ஆட்சியாளர்களைக் கண்டிச்சி, விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டங்கள்ல விவசாயிகள் முழக்கம் போடுறது, எல்லா மாவட்டங்கள்லயுமே ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம்தான். எங்களோட உணர்வுகளையும் ஆதங்கத்தையும் மத்திய மாநில அரசுகளின் கவனத்துக்கு ஆட்சியர் கொண்டு போகணும்ங்கறதுக்காகத்தான் கண்டன முழக்கம் எழுப்புறோம். வெளியில போயி முழக்கம் போடுங்கனு ஆட்சியர் சொல்றது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளையும் அவமதிக்கும் செயல். இது அராஜகம். பிரதமர், முதலமைச்சர், கலெக்டர் எல்லாருமே மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சேவகர்கள். இவங்களை நாங்க விமர்சிக்கக் கூடாதா” எனக் கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள் சங்க நிர்வாகிகள்.