வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (28/04/2018)

கடைசி தொடர்பு:00:30 (28/04/2018)

'தகுதி நீக்க வழக்கில் சாதகமான தீர்ப்பு!’ - பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள், பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 

தீர்ப்புக்குப் பின் பட்டாசு வெடிப்பு

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் பன்னீர் செல்வம் உட்பட 11எம்.எல்.ஏ'க்கள் எடப்பாடி அரசிற்கு எதிராக போர்கொடி தூக்கினர். அதனைத்தொடர்ந்து தனது அரசு மீது நம்பிக்கை தீர்மானத்தை கொண்டுவந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ'க்கள் வாக்களித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அரசியல் ஆட்டத்தில் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்தனர். இதுகுறித்து சபாநாயகரிடம் தி.மு.க. புகார் செய்தும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இதே நேரம், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் செய்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான தங்கத் தமிழ்ச்செல்வன் உட்பட 18 எம்.எல்.ஏ'க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதித்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தி.மு.க. கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கையும், டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ'க்கள் தொடுத்த வழக்கையும் விசாரித்து வந்தது உயர் நீதிமன்றம். இந்நிலையில், தி.மு.க. கொறடா தொடுத்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பில், "பன்னீர்செல்வம் உட்பட 11 பேரை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது" என்று தீர்ப்பளித்தனர். மேலும், சட்டப்பேரவையில் இருக்கும் ஜெயலலிதா படத்தை நீக்க கோரி திமுக பொருளாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இச்செய்தி அறிந்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் இருக்கும் வீட்டின் முன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.