"இப்படி ஒரு டீலிங் இருக்கும்போது விஜயபாஸ்கரை எப்படி முதல்வர் நீக்குவார்"? - சமூக ஆர்வலர்கள்! | social activists slams vijayabaskar and edappadi palanisamy on gutka case

வெளியிடப்பட்ட நேரம்: 08:06 (28/04/2018)

கடைசி தொடர்பு:08:06 (28/04/2018)

"இப்படி ஒரு டீலிங் இருக்கும்போது விஜயபாஸ்கரை எப்படி முதல்வர் நீக்குவார்"? - சமூக ஆர்வலர்கள்!

ஸ்டாலின் திமுக குட்கா ஊழலுக்கு எதிராக புகார்

ஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையில் இருந்த குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்    அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுதான் தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட். 

2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் சட்டவிரோதமாகக் குட்கா பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு குடோனில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட தொகை உள்பட வரவு - செலவுகள் இடம்பெற்றிருந்த கணக்குப் புத்தகம் ஒன்றை வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில், தங்குத்தடையின்றி குட்கா சப்ளை செய்வதற்கு யார், யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விபரம் இடம்பெற்றிருந்ததாகத் தகவல்கள் வெளியாயின. அதன்படி, தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சென்னை மாநகர காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரது பெயர்கள் சங்கேத எழுத்துகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த விவகாரம் தமிழகச் சட்டமன்றத்தில் ஏற்கெனவே புயலைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் புகார் போனது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில், இதில் தொடர்புடையதாகச் சொல்லப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் இருவரும் பதவி விலகவேண்டும் எனவும் கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.  

விஜயபாஸ்கர் அமைச்சர்

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ''நீதிமன்றத்தின் உத்தரவு, மிகுந்த  நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் இருவரையும் பதவியில் இருந்து நீக்குவதற்கான தார்மீக கடமை தமிழக அரசுக்கு உள்ளது. அந்த அடிப்படையில், அவர்களைப் பதவிநீக்கம் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்களாகவே பதவி விலக வேண்டும். ஆனால், அப்படியான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை இல்லை. குட்கா ஊழல் விவகாரம் புதியது அல்ல... மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் தெரிந்தேதான் நடந்துள்ளது. அதேபோன்று தற்போதைய முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கும் குட்கா ஊழல் தெரிந்தேதான் நடந்துகொண்டிருக்கிறது. இருவருக்கும் ஆன டீலிங் அப்படி. அதனால் விஜயபாஸ்கரைப் பதவிநீக்கம் செய்யமாட்டார் எடப்பாடி பழனிசாமி.

ஜெயராமன் வெங்கடேசன் அறப்போர் இயக்கம் குறிப்பாக, விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட 89 கோடி ரூபாயில் 13 கோடி ரூபாய் எடப்பாடி பழனிசாமிக்கும், மற்ற ஏழு அமைச்சர்களுக்கும் கொடுக்கப்பட்ட விபரத்தை வருமானவரித் துறை கைப்பற்றியிருந்தது அனைவருக்குமே தெரியும். இப்படியான நிலையில், விஜயபாஸ்கரைப் பதவியில் இருந்து எப்படி நீக்குவார் எடப்பாடி பழனிசாமி? அப்படி நீக்கினால், முதலமைச்சர் உள்ளிட்ட ஏழு அமைச்சர்களின் ஊழலும் வெளியே வந்துவிடும் அல்லவா? எனவே, அவரை நீக்க மாட்டார்கள். மேலும், அமைச்சராக உள்ள ஒருவரிடம் விசாரணை நடைபெற்றால், அது நேர்மையாக நடைபெறுமா? எனவே, இந்த வழக்கு விசாரணை முடியும்வரை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் இருவரையும் தார்மீக அடிப்படையில் பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.

இதுகுறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலத் தலைவர் சிவ.இளங்கோ, "இந்த வழக்கில் சிவ இளங்கோ சட்டப் பஞ்சயாத்து இயக்கம் சி.பி.ஐ. விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமென்றால், விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி ராஜேந்திரன் இருவரும் பதவி விலக வேண்டும். டி.ஜி.பி. ராஜேந்திரனைப் பதவி நீட்டிப்புச் செய்ததன் மூலம் அவர் நேர்மையானவர் என்ற தோற்றம் அவர்மீது உள்ளது. நேர்மையாக உள்ள எந்த அதிகாரியும் பதவி நீட்டிப்பை ஏற்க மாட்டார்கள். உண்மையில், நேர்மையாக இருக்கக்கூடிய அதிகாரிகளாக இருந்தால், இப்படியான குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே பதவி விலகிவிட்டு அந்தக் குற்றத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை என நிரூபித்திருப்பார்கள். இந்த வழக்கை சி.பி.ஐ. எடுத்து விசாரிக்கும்போது டி.ஜி.பி-க்கு இணையான எந்த அதிகாரியும் விசாரிக்கப் போவதில்லை. அதில் உள்ள சாதாரண அதிகாரிதான் விசாரணை நடத்துவார். அப்படியிருக்கும்போது, அந்த விசாரணை எப்படி  இருக்கும் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணை முடியும்வரை அமைச்சர் விஜயபாஸ்கர்  மற்றும் டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகிய இருவரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும்'' என்றார். 

இந்த நிலையில், டி.ஜி.பி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் என்று அவருடைய அலுவலகத்தைத் தி.மு.க-வினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close