வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (28/04/2018)

கடைசி தொடர்பு:15:44 (28/06/2018)

'உயிரோடும் வாழ்க்கையோடும் விளையாடுகிறார்கள்'- குடங்களுடன் சென்ற போராட்டக்காரர்கள்

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக, பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சிக்குட்பட்ட புனல் குளம், நம்புரான் பட்டி, சங்கம் விடுதி ஆகிய கிராமங்களில் உள்ள மக்களின் அடிப்படை மற்றும் குடிநீர் தேவைகளை பல மாதங்களாக நிறைவேற்றாத ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி தலைமையில் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது. நூற்றுக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் ஒன்று திரண்டு, கந்தர்வகோட்டை பிரதான சாலை வழியாக கோஷமிட்டவாறே நடந்துச்சென்றனர். தங்கள் தலைக்கு மேலாக காலி பிளாஸ்டிக் குடங்களை சுமந்தவாறும் தங்கள் சங்கத்தின் கொடியைப் பிடித்தவாறும் அவர்கள் ஊர்வலமாகச் செல்ல,முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள் சென்றன கந்தர்வக்கோட்டை ஊராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த அவர்களை, முகப்பிலேயே போலீஸ் தடுத்து நிறுத்தியது.

போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கும் போலீஸ் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில், அலுவலக முகப்பிலேயே காலி குடங்களை வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு, அதிகாரிகளின் அலட்சியத்தையும் மெத்தனம் போக்கையும் கண்டித்து கோஷமிட்டார்கள். மாவட்டச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி கூறுகையில், "சங்கம் விடுதி, புனல் குளம், நம்புரான் விடுதி ஆகிய கிராமங்களில் பலமாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனை போர்கால நடவடிக்கைகள் மூலமாக சரி செய்ய வேண்டும் என்று நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் நேரடியாகவும் மனுக்கள் கொடுத்தும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த அதிகாரிகள் மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்து வைக்காமல், அவர்களின் உயிரோடும் வாழ்க்கையோடும் விளையாடுகிறார்கள்.

போராட்டக்காரர்கள்

அதுபோல், மேல்நிலை நீர்த்தொட்டிகள் சுத்தம் செய்வதும் அவற்றை முறையாகப் பராமரிப்பதும் கிடையாது. இதனால், அவற்றின் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரால் மக்களுக்கு வியாதிகள் வருகின்றன. ஒவ்வொரு வருடமும் கோடைக்காலம் முழுவதும் இந்தப்பிரச்சினைகள் வருவதும் நாங்கள் போராடுவதும் வழக்கமாகவே இருந்துவருகிறது. அதிகாரிகளும் மக்கள் போராட்டம் நடத்தினால் குடிநீர் வழங்குவோம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இவையெல்லாம், நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்கு, கிராமத்தில் பெருகிவரும் மக்கள் தொகையையும் வறட்சியையும் அதிகாரிகள் கணக்கிட்டு, அதற்கு ஏற்றார்போல், போர்வெல், குடிநீர்த் தொட்டிகளை அதிகரிக்க வேண்டும்" என்றார்.