தீர்ப்புக்கு முன்; தீர்ப்புக்கு பின்! - பன்னீர்செல்வம் வீட்டில் என்ன நடந்தது?

தீர்ப்பு வரும் வரை பன்னீருக்கு தூக்கம் வரவில்லை.! – பெரியகுளம் வீட்டில் என்ன நடந்தது?

சட்டசபையில் தனது அரசின் மீது எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிராக பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக கொறடா சக்கரபாணி வழக்குத் தொடுத்தார். சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை ஆளும் அரசு நிறுவியதை எதிர்த்து திமுக-வின் அன்பழகன் வழக்குத் தொடுத்தார். இந்த இரண்டு வழக்குகளும் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பானது. 

முன்னதாக, நேற்று முன்தினம் (26/04/2018) பன்னீர்செல்வம், பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகத் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு வந்துவிட்டார். நேற்று (27/04/2018) காலையில், விருப்பாச்சி ஆறுமுக நாயனார் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பன்னீர்செல்வம், சரியாக 12.30 மணிக்குத் தனது பெரியகுளம் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன் பின்னர் வீட்டிற்குள் என்ன நடந்தது என்று அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டோம். ‘’எப்போதும் மதிய சாப்பாடு 2 மணியைத் தாண்டாது. நேற்று நல்ல நாள், மதுரை மீனாட்சி திருக்கல்யாணம். அதனால், 1மணிக்குத் சாப்பிட்டுவிட்டார். சாப்பிட்டதும் கொஞ்ச நேரம் படுத்து தூங்குவார். ஆனால், நேற்று டிவியை போட்டு அதன் முன் அமர்ந்துவிட்டார். செய்திச் சேனல்களை பார்த்துக்கொண்டே இருந்தவர், இடை இடையே போனில் பேசிக்கொண்டே இருந்தார்.

பன்னீர்செல்வம்

உயர்நீதிமன்ற தீர்ப்பு 3.30 மணிக்கு வெளியே தெரியவந்தது. அருகில் இருந்தவர்களைப் பார்த்து ஒரு புன் சிரிப்பு சிரித்துவிட்டு, வேகமாகத் தூங்கச்சென்றுவிட்டார். தீர்ப்பு வந்த பின்னரே தூங்கச் சென்றார்…’’ என்றனர்.

பின்னர், மாலை 5மணி வரை தூங்கிவிட்டு வீட்டின் அருகே இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் கிளம்பிச்சென்றார். மதியம் முதல் மாலை வரை காத்திருந்த பத்திரிகையாளர்கள் அதிருப்தியடைந்தனர். ’எப்போதும் சாப்பிட்டவுடன் தூங்கும் பன்னீர், இன்று தீர்ப்பு வரும் வரை தூக்கம் இல்லாமல் இருந்திருக்கிறார்…’ என்று தேனி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!