வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (28/04/2018)

கடைசி தொடர்பு:09:40 (28/04/2018)

ஒரே நாளில் கும்பாபிஷேகம்... இபிஎஸ் - ஓபிஎஸ் பங்கேற்றதன் சுவாரஸ்யம்

எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிராக தர்மயுத்தத்தில் இருந்த பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கும், சட்டபேரவையில் ஜெயலலிதா படத்தை ஆளும் அரசு வைத்ததை எதிர்த்து திமுகவின் அன்பழகன் தொடுத்த வழக்கும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பானது. இதற்கு முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தங்களது சொந்த ஊர்களில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான எடப்பாடி தாலுகா நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் தனது மனைவி, மகன், மருமகள், பேரன் ஆகியோருடன் கலந்துகொண்டார்.

அதே நேரத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், தனது சொந்த ஊரான தேனியில், தீர்த்ததொட்டி விருப்பாட்சி ஆறுமுக நாயனார் கோயில் கும்பாபிஷேகத்தில் தனது இளைய மகன் பிரதீப்புடன் கலந்துகொண்டார். இருவரும் ஒரேநாளில் தனது சொந்த ஊரில் உள்ள கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டதற்கும், உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என சில ஆன்மிக ஆர்வலர்களிடம் கேட்டபோது, ‘’நிச்சயம் சம்மந்தம் உண்டு. பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டால், நம் பாவங்கள், கர்ம வினைகள் நீங்கும். வாழ்க்கை புதுபாதையை நோக்கி நகரும். நல்ல தகவல்கள் வந்து சேரும்.

அதன் அடிப்படையில் பார்த்தால், முதல்வரும், துணைமுதல்வரும் ஒரே நாளில் கும்பாபிஷேகங்களில் கலந்துகொண்டதற்கும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கும் தொடர்பு இருக்கிறது. இதில் இருக்கும் சுவாரஸ்யம் என்னவென்றால், எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டது அவரது சொந்த கோயில். அதனால் அவருக்கு வரும் காலம் மேலும் சிறப்பாக இருக்கும்’’ என்றனர். ''இதனால் தான், பன்னீர்செல்வம், தனது வீட்டின் அருகே இருக்கும் பெரியகோயில் எனப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயிலை தனது சொந்த செலவில் பராமரித்து கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்கிறாரோ? '' என்கின்றனர் கட்சியினர்.