'என்னைவிட இந்த இரண்டு பேரும் நல்லவர்களாம்'- திவாகரனை காமெடி அடித்த தினகரன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் மாநில அரசைக் கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

தினகரன் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டி.டி.வி. தினகரன், ''காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உரியக் கால அவகாசம் கொடுத்தும், அதனை அலட்சியப்படுத்திய மத்திய அரசு, தற்போது மீண்டும் 2 வாரக் கால அவகாசம் கேட்கிறது.  அதாவது, கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே மத்திய அரசு செயல்படுகிறது.  அங்கு தேர்தல் முடிந்த பிறகாவது மேலாண்மை வாரியம் அமைப்பார்களா? அல்லது அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வரை இழுத்தடிப்பார்களா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் நமது ஜீவாதார உரிமை.  அதனைப் பெறுவதற்கு ஜாதி, மதம், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.  

தினகரன்

திவாகரனிடம் நான் ஆலோசனைக் கேட்கவில்லை என்றுதான் அவர் வாய்க்கு வந்ததையெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  மன்னார்குடி ராஜகோபால சுவாமியைப் போய் வணங்கிக்கொண்டு ஓய்வு எடுப்பது அவருக்கு நல்லது.  நம்மை அழிக்க நினைக்கும் எதிரிகளை சமாளிப்பதா? கட்சிப் பணியை பார்ப்பதா? அல்லது மன்னார்குடி ஓடிவந்து அவரிடம் ஆலோசனை கேட்பதா? என்னைவிட எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் நல்லவர்கள் என்று திவாகரன் கூறுவது காமெடியாக உள்ளது. இதுபோல் எந்தவிதமான விமர்சனங்கள் வந்தாலும், தொண்டர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் கழகப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் திராவிடம் இல்லையென்று பெரிய குற்றம் சுமத்துகிறார்கள்.  அண்ணா, எம்.ஜி.ஆர். இவர்களின் உருவம்தான் சமூக நீதி காத்த நமது அம்மா.  திராவிடத்தின் ஒட்டுமொத்த உருவமே அம்மா.  திராவிடம் என்றால் அம்மா, அம்மா என்றால் திராவிடம்.  இது புரியாதவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  காவிரி நீரை எடப்பாடியால்தான் கொண்டு வரமுடியும் என்று சில அமைச்சர்கள் பேசுகிறார்கள்.  எடப்பாடியால் சேலத்திலிருந்து 4 கேன்களில்தான் தண்ணீர் கொண்டுவர முடியும்.  காவிரி பிரச்னையில் உருப்படியாக வேறு எதுவும் அவரால் செய்ய முடியாது.  காவிரி நீர் பிரச்னையில் நாம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்த பின்புதான் இவர்கள் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடத்துகிறார்கள்.  திருவாரூர் பொதுக் கூட்டத்துக்கு வரும் எடப்பாடிக்கு நம் கட்சியினர் கேன்களில் தண்ணீர் கொண்டுபோய்க் கொடுக்கும் போராட்டம் நடத்த வேண்டும்'' என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!