என்கவுன்டர் பயத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த ரவுடி!

ஸ்ரீதர் பாணியில் காஞ்சிபுரத்தை மிரட்டி வந்த பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த தியாகு என்பவர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

என்கவுண்டருக்கு பயந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ‘பொய்யாகுளம்’ தியாகு என்பவர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

ரவுடி தியாகு, காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தாதா மறைந்த ஸ்ரீதர் என்பவர் வெளிநாடுகளில் இருந்து காஞ்சிபுரத்தில் உள்ளவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் கம்போடியாவில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பிற்குப் பின் காஞ்சிபுரத்தில் மீண்டும் தாதாக்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பொய்யாகுளம் பகுதியைச் சேர்ந்த தியாகு என்பவர் ஸ்ரீதரை போல எல்லோரையும் போன் மூலம் மிரட்டத் தொடங்கினான். காவல்துறையினர் அவரைக் கைது செய்த பிறகும் பொதுமக்கள் புகார் கொடுக்க அஞ்சுகின்றனர். இதனால் ஜாமீனில் வெளியே வந்த தியாகு பல தொழிலதிபர்களையும் மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கினார்.

தியாகு மீது கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கடந்த ஆறுமாதமாக தியாகுவை பிடிக்கக் காவல்துறை மூலமாகத் தனிப்படை அமைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவரை சுட்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீஸ் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தன்மீதான வழக்கிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் தியாகுவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று தியாகு சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் பொய்யாகுளம் தியாகுவை காவலில் எடுத்து விசாரிக்க காஞ்சிபுரம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!