வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (28/04/2018)

கடைசி தொடர்பு:11:25 (28/04/2018)

மலைப்பாதையில் சென்றபோது வேன் பிரேக் ஃபெயிலியர்! சுற்றுலாப் பயணிகளுக்கு நடந்த சோகம்

தேனி மாவட்டம், போடிமெட்டுச் சாலையில் விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இன்று அதிகாலை, போடிமெட்டில் 7-வது கொண்டைஊசி வளைவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர்.

திருவாருர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 21 பேர்,  மூணார் சென்றுவிட்டு போடிமெட்டு வழியாக இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தபோது, ப்ரேக் செயலிழந்து வண்டி பாறைமீது மோதியது. இதில், வேனில் பயணம்செய்த குழந்தைகள் 21 பேர் காயமடைந்தனர். இதில், 15 பேருக்கு  படுகாயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை அவர்களை மீட்டு, போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிலர், மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

"போடிமெட்டு சாலையில், இரவு நேரத்திலும் அதிகாலையிலும் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய்தால், அடிக்கடி பாறைகள் உருண்டு விழும் சம்பவமும், போடிமெட்டுச் சாலையில் நடைபெறும். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், மூணார் உட்பட கேரளாவுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், கேரளாவுக்குச் செல்ல தென் தமிழக மக்கள் அதிகமாக போடிமெட்டுச் சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில், வாகன ஓட்டிகளுக்குப் போதிய விழிப்புஉணர்வை மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும், போக்குவரத்துத்துறையும் ஏற்படுத்த வேண்டும்" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.