நிர்மலா தேவி விவகாரத்தில் அறிக்கை தயாரிக்கும் சந்தானம்! | Santhanam preparing documents in nirmala devi issue

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (28/04/2018)

கடைசி தொடர்பு:12:45 (28/04/2018)

நிர்மலா தேவி விவகாரத்தில் அறிக்கை தயாரிக்கும் சந்தானம்!

நிர்மலாதேவி தொடர்பான விசாரணையில், அதன் அறிக்கையை விசாரணை அதிகாரி சந்தானம் தயார்செய்துவருகிறார்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில், இரண்டாம் கட்ட விசாரணையைக் கடந்த 25-ம் தேதி முதல் தொடங்கியது. தமிழக ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் ஐஏஎஸ்,  காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், அலுவலர்கள், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். சிறைக்குச் சென்று, நிர்மலா தேவியிடம் ஒரே நாளில் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அவர் நடத்திய விசாரணையில் பல தகவல்களைக் கூறியுள்ள நிர்மலா தேவியிடம், ''ஆளுநர் பேரை தைரியமாகச் சொல்வதற்கு என்ன காரணம். அப்படி சொல்லச் சொன்னவர்கள் யார்?  என்று கேட்டிருக்கிறார்.  அதற்கு  நிர்மலா தேவி, சில பேரை கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த நிலையில், நேற்று காலை அருப்புக்கோட்டை சென்ற சந்தானம் குழு, பாதிக்கப்பட்ட மாணவிகள், கணிதத்துறை ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தினர் . விரைவில், சி.பி.சி.ஐ.டி விசாரணையில் இருக்கும் உதவிப்பேராசிரியர் முருகன், கருப்பசாமியிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார். அதனால், சந்தானம் விசாரணை நீண்ட நாள்களுக்குத் தொடரும் என்று சொல்லப்பட்டது.

இதற்கிடையே, மதுரை ஒத்தக்கடையில் இருக்கும் உதவிப் பேராசிரியர் முருகன் வீட்டில் நேற்று சி.பி.சி.ஐ.டி-யினர் சோதனையிட்டு, பல முக்கிய ஆவணங்களை எடுத்துள்ளனர். அப்பகுதி வி.ஏ.ஓ முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற்றது . இந்நிலையில், நேற்றிரவு விசாரணை அதிகாரி சந்தானம், மதுரை அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்து தங்கியுள்ளார் . அதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் 5-ம் எண் அறையில் தான் சேகரித்த தகவல்களை வரிசைப்படுத்தி அறிக்கை தயார் செய்துவருவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. விசாரணை அதிகாரி சந்தானத்தின் அறிக்கை எவ்வாறு இருக்கும் என பலரும் எதிர்பார்த்துள்ளனர்.