நல்ல ஜோதிடராக மாறிவருகிறார் தினகரன்! பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டல்

டி.டி.வி தினகரன் நல்ல ஜோதிடராக மாறி வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். 

டி.டி.வி.தினகரன் நல்ல ஜோதிடராக மாறிவருவதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டலடித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல், மே 12-ல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், மத்தியில் ஆளும் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. தேர்தலுக்கு முன் நடத்தப்பட்டுவரும் கருத்துக் கணிப்புகளில், தேர்தல் முடிவுகள் இழுபறியாகவே இருக்கும் என கூறப்பட்டுவருகிறது.  இந்நிலையில், நேற்றிரவு ராமேஸ்வரம் வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கு, சுமார் 3 மணி நேரம் நடந்த சண்டிஹோம யாகத்தில் பங்கேற்று சிறப்பு வழிபாடுசெய்தார். சுவாமி சந்நிதியில் வேதவிற்பன்னர்கள் வளர்த்த யாக வேள்வியில் பங்கேற்ற அவர், தீக்குண்டத்தில் தானியம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைப் போடார். பின்னர், கும்பத்தை எடுத்து வந்த பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதசுவாமி சந்நிதிக்குச் சென்று அபிஷேகம் செய்து, சுவாமி தரிசனம்செய்தார்.

ராமேஸ்வரம் கோயிலில் நடந்த யாகத்தில் பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன் 
 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''உலக நன்மைக்காக சிறப்பு பூஜை செய்து, சுவாமி தரிசனம் செய்துவந்தேன். கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்திற்கு காவிரி நீர் வரும். மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரிய வழக்கு தொடர்பாக, நேற்று கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் கொடுத்த மனுவை திரும்பப் பெற்றதுகுறித்து வழக்கறிஞரிடம்தான் கேட்க வேண்டும். கீழ் நீதிமன்ற நீதிபதிகள் முதல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை உள்ளவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கிறார்கள். நாட்டில் மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும், எல்லாவற்றிற்கும் காரணம் பா.ஜ.க., தான் என குறை கூறுகின்றனர்.

கர்நாடகத் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் வராது என நண்பர் தினகரன் கூறிவருகிறார். இதிலிருந்து, அவர் நல்ல ஜோதிடராக மாறிவருகிறார் எனத் தெரிகிறது. தனுஷ்கோடி- தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்தைத் துவக்க, இலங்கை அரசு தரப்பில் இருந்து தகவல் ஏதும் வரவில்லை. நாங்கள், அதற்குத் தயாராக இருக்கிறோம். மேலும், திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி, திருச்செந்தூர் , தூத்துக்குடிக்கு படகுப் பயணம் மேற்கொள்வது தொடர்பான பணிகள் நடந்துவருகின்றன'' என்றார்.

அமைச்சருடன் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கேசவ விநாயகம், குப்புராம், சுப.நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் முரளிதரன், ஆத்ம கார்த்திக், சண்முகராஜா, நகர் தலைவர் ஶ்ரீதர் உள்ளிட்டோர் யாகத்தில் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!