வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (28/04/2018)

கடைசி தொடர்பு:13:15 (28/04/2018)

மதுரை சித்திரைத் திருவிழாவுக்குத் தயாரான பொருள்கள்! களைகட்டும் விற்பனை

திருவிழாக்கள் மக்களின் ஒன்று கூடலுக்கானவை. சொந்த, பந்தங்கள் நண்பர்களுடன் கொண்டாட்டமாய்க் கழியும்  அந்த சில தினங்கள் வழக்கமான எந்திர வாழ்வில் இருந்து நம்மை மீட்கும் திறவுகோல். ஊரின் பாரம்பரியம், மற்றும் கலைகளை உயிர்ப்பிக்கும் திருவிழாக்கள், உள்ளூர்த் தொழில்களையும் உயர்த்திப் பிடிக்கின்றன.

திருவிழாக்கள், மக்களின் ஒன்றுகூடலுக்கானவை. சொந்த பந்தங்கள், நண்பர்களுடன் கொண்டாட்டமாய்க் கழியும்  அந்த சில தினங்கள் வழக்கமான எந்திர வாழ்விலிருந்து நம்மை மீட்கும் திறவுகோல். ஊரின் பாரம்பர்யம் மற்றும் கலைகளை உயிர்ப்பிக்கும் திருவிழாக்கள், உள்ளூர்த் தொழில்களையும் உயர்த்திப்பிடிக்கின்றன. அந்த வரிசையில், விழாக்கோலம் பூண்டுள்ள மதுரையில், சித்திரைத் திருவிழாவிற்கெனத் தயாராகிவரும் பொருள்கள் இவை,

திருவிழா மஞ்சள் குங்குமம்

தோப்பறை (தோல்பை)

கள்ளழகர் வேடமணியும் பக்தர்கள், தண்ணீர் பீய்ச்சுவதற்குப் பயன்படுத்தும் பொருள், தோப்பறை. உரிக்கப்பட்ட ஆட்டுத்தோல், சுண்ணாம்பு, ஆவாரம்பூ,  கடுக்காய் இவற்றைக்கொண்டு பதப்படுத்தி, தோப்பறை தயாராகிறது. தோல்பை தயாராவதற்கு இரண்டு மாத கால அவகாசம் தேவைப்படும். இது, விருதுநகர் காரியாபட்டியைச் சேர்ந்த மக்களின் பாரம்பர்யத் தொழிலாகும். 80 முதல் 100 குடும்பங்களின் உழைப்பால் விற்பனைக்குவரும் இவை, 300 ரூபாய்  முதல் 500 ரூபாய் வரை  விலைக்குக் கிடைக்கின்றன.

தோல்பை

கள்ளழகர் தலைப்பாகை:

கள்ளழகர் வேடமிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களின் முக்கியமான ஆக்சசரி. கேரளாவின் செங்கோட்டையில் இருந்து இதற்கான ஈத்தைக்குச்சிகள் வரவழைக்கப்படுகின்றன. மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த மக்களின் கைவண்ணத்தில்  உறுமா,  கொட்டான், கொக்குமுடி, மயில்முடி தலைப்பாகைகள் தயாராகின்றன. மற்ற தினங்களில் ஒயர் கட்டில், நாற்காலிகளைப் பின்னுவதைத் தொழிலாகக் கொண்ட இவர்கள்,  வருடத்தில் மூன்று மாதங்கள் சித்திரைத் திருவிழாவிற்கான பொருள்கள் தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். கொடியேற்றம் தொட்டு 70 குடும்பங்கள் இவற்றை விற்பனைசெய்கிறார்கள். மூலப்பொருள்களுக்கான செலவை மட்டுமே விலையாக நிர்ணயிக்கும் இவர்கள், இத்தொழிலை லாபத்திற்காக அல்லாமல் மனநிறைவிற்காகச் செய்வதாய்க் கூறுகிறார்கள்.

தலைப்பாகை

மஞ்சள் கயிறு:

மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண வரும் பக்தர்களுக்கு, 'மஞ்சள் கயிறு' வழங்கும் நேர்த்திக்கடன் காலங்காலமாய் மதுரை மக்களிடையே உள்ளது.  மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தயாராகும் இந்த மங்கலப் பொருள், கோயிலைச் சுற்றியுள்ள கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

மஞ்சள் கயிறு

திரி:

கருப்பசாமி வேடம் அணிந்து ஆசிவழங்கும் திரியாட்டக்காரர்களின் ஃபேவரைட் இந்த மெகா சைஸ் திரி. நீளமான குச்சியில் இறுக சுற்றப்பட்ட காடாத்துணி மற்றும் அதன் மேல் மஞ்சள் நிற பருத்தித்துணி சுற்றப்பட்டு, திரி தயாராகிறது. ஆண்டு முழுவதும் இவை விற்பனைக்கு வந்தாலும், மாசி தொடங்கி சித்திரை வரையிலான மாதங்கள் திரிக்கான பீக் சீசன். மதுரை புதுமண்டபக் கடைக்காரர்களால் தயார்செய்யப்பட்டு விற்பனைக்குவருகிறது.

கள்ளழகர் உடை:

கள்ளழகர் வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அணியும் உடை இது. பக்தர்கள் விரும்பும் நிறம் மற்றும் அளவுக்கேற்ப வெல்வெட் மற்றும் காடாத்துணியால் தைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. புதுமண்டபக் கடைக்காரர்களின் பிரதானத் தொழிலாய் இது உள்ளது.

கள்ளழகர்

அதிக உழைப்பும் குறைந்த வருவாயும்கொண்ட இத்தொழில்கள், மக்களின் வாழ்வாதாரம் காக்கத் தவறுவதில்லை. திருவிழாக்களுக்கான நோக்கம் எதுவானாலும், அவை நல்கும் நன்மைகள் ஏராளம்.