'' தினகரன், திவாகரனைத் திட்டுறதை எப்படி ஜெயா டி.வில லைவ் போடுறது?"  - முற்றும் மோதல்

'' தினகரன், திவாகரனைத் திட்டுறதை எப்படி ஜெயா டி.வில லைவ் போடுறது?

விவேக் ஜெயராமன்

தினகரனுக்கு எதிராக தினம்தோறும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார் திவாகரன். இதற்கு தினகரன் தரப்பினரும் பதில் கொடுத்து வருகின்றனர். ' குடும்ப மோதலின் அடுத்தகட்டமாக விவேக்கைப் பழிவாங்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ஜெயா டி.வியின் சி.இ.ஓ பொறுப்பைக் கையில் எடுக்க விரும்புகிறார் அனுராதா. இதன் காரணமாக, விவேக் குறித்து பெங்களூரு சிறைக்கு மொட்டைக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன' என்கின்றனர் மன்னார்குடி சொந்தங்கள். 

நடராசன் மறைவையொட்டி பரோலில் வந்த சசிகலா, மீண்டும் சிறைக்குச் சென்றதில் இருந்தே தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையில் அதிகார மோதல் தொடங்கிவிட்டது. ' இது உன் கட்சியா? சின்னம்மா கட்சியா?' என வார்த்தைப் போர்கள் தடிக்கத் தொடங்கிவிட்டன. திவாகரன் மகன் ஜெயானந்த், தினகரனின் புதிய அமைப்பு குறித்துக் கூறிய வார்த்தைகளுக்கு எதிராகப் ஃபேஸ்புக்கில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் வெற்றிவேல். அதன் அடுத்தகட்டமாக, நேரடியாகவே திவாகரனோடு மோதினார் தினகரன். ' எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலில் இவ்வாறு திவாகரன் செயல்படுகிறார்' என்ற விமர்சனம் எழுந்தபோது, ' எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தைவிட மிகப் பெரிய துரோகி தினகரன்' என அதிர வைத்தார் திவாகரன். நாளுக்குநாள் நீடித்துக் கொண்டேயிருக்கும் இந்த சண்டை, எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியாமல் தவிக்கின்றனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள். இந்நிலையில், ' விவேக்குக்கு எதிராக அடுத்த நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது' தினகரன் குடும்பம் என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில். " ஜெயா டி.வி அதிகாரத்தைக் கைப்பற்ற நீண்டநாள்களாகவே முயற்சித்துக் கொண்டிருக்கிறார் தினகரன் மனைவி அனுராதா. குடும்ப மோதல் அதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது" என விவரித்த சசிகலா உறவினர் ஒருவர், 

" தினகரன்-திவாகரன் மோதல் குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் விவேக் ஜெயராமன் கூறவில்லை. இரண்டு நாள்களுக்கு முன்பு, 'நீங்கள் விரைவாகச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தால், தனியாகவே செல்லுங்கள். நீண்டதூரம் செல்லவேண்டும் என்றால் இணைந்து செல்லுங்கள்' என்ற ஆப்ரிக்க பழமொழி ஒன்றைப் பதிவிட்டு, ' அனைவருக்குமான மெசேஜ் இது' எனக் கூறியிருந்தார். கடந்த சில நாள்களாக ஜெயா டி.வியின் செய்தி ஒளிபரப்பில் தலையிட்டு வருகிறார் அனுராதா. ' ஜெயா டி.வியை நாங்கள்தான் உருவாக்கினோம். இப்போது இந்தச் சேனல் நன்றாக நடப்பதற்கு நாங்கள்தான் காரணம். தினகரன் பேட்டியை ஏன் லைவ் போடுவதில்லை?' என ஆவேசப்பட்டிருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த ஜெயா டி.வி நிர்வாகிகளோ, ' அவர் பேட்டி கொடுக்கும்போது நாங்கள் லைவ் போடுகிறோம். அந்தநேரத்தில், அவர் திவாகரனைத் திட்டுகிறார். அதனால்தான் லைவ் போடுவதை நிறுத்திவிட்டு, எடிட் செய்துவிட்டு ஐந்து நிமிடத்தில் ஒளிபரப்புகிறோம்' எனக் கூறியுள்ளனர். இதனை ஏற்காத அனுராதா ' அவர் இந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்தானே...மற்ற சேனல்கள் எல்லாம் அவர் பேட்டியை லைவ் போடுகின்றன' என விளக்கியிருக்கிறார். சேனல் பொறுப்பாளர்களும், ' குடும்ப விஷயங்களைப் போட வேண்டாம் என பாஸ்(விவேக்) கூறிவிட்டார்' என அமைதியாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, 'ஜெயா டி.வியில் நிர்வாகம் சரியில்லை' என சசிகலா கவனத்துக்கு லெட்டர் மேல் லெட்டர் பறந்து கொண்டிருக்கிறது" என விவரித்தவர், 

அனுராதா - தினகரன்

" ஜெயா டி.வி உருவாக்கத்தில் மாஸ்டர் மைண்டாக இருந்தவர் சசிகலா. அவருடைய நேரடி அசைன்மெண்ட்டில்தான் சேனல் உருவானது. இந்தச் சேனல் உருவாகி, பல ஆண்டுகளுக்குப் பிறகே அதன் நிர்வாகியாகப் பதவியேற்றார் அனுராதா. அவருடைய நிர்வாகத்தில் ஏற்பட்ட அனைத்துக் குளறுபடிகளும் சசிகலா கவனத்துக்குச் சென்றது. குறிப்பாக, பணவிவகாரத்தில் அனுராதாவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்தார் சசிகலா. இதன் நீட்சியாக, ஜெயா டி.வியின் தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்தும் அனுராதா நீக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் எந்தக் குடும்ப மோதலும் இல்லை. ' இவர்தான் ஜெயா டி.வியை உருவாக்கினார்' என்பதே தவறான தகவல். அப்படி உருவாக்கியிருந்தால், அவரை ஏன் சசிகலா நீக்க வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு விவேக் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை சசிகலாவிடம் தெரிவித்திருந்தார் தினகரன்.

ஒருகட்டத்தில், 'நான் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்' என ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார் விவேக். இந்தக் கடிதத்தை சசிகலா ஏற்கவில்லை. மாறாக, ' ஜெயா டி.வி பொறுப்பை விவேக்கே கவனிக்கட்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார். இந்தப் பதிலை அனுராதா எதிர்பார்க்கவில்லை. கணக்கு வழக்குகளில் விவேக் சரியாகச் செயல்படுவதால்தான் அந்தப் பொறுப்பில் அவர் நீடிக்கட்டும் என விரும்பினார் சசிகலா. ' மற்ற சேனல்கள் எல்லாம் குடும்ப விவகாரத்தைக் காட்டி நம்மை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் என்றால், அதற்கு ஜெயா டி.வியும் துணை போக வேண்டுமா?' என்பதுதான் விவேக்கின் எண்ணம். திவாகரனுடனான மோதல் முடிவுக்கு வர இருக்கிறது. அடுத்தகட்டமாக, விவேக்கோடு மோதத் தொடங்கியிருக்கிறது தினகரன் குடும்பம்" என்றார் விரிவாக. 

" திவாகரன் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார் விவேக். திவாகரன் மகள் ராஜமாதங்கியின் வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விவேக் செல்லவில்லை. ' குடும்ப நிகழ்ச்சி என நினைத்துக் கொண்டு சென்றாலும், திவாகரன் பக்கம் விவேக் சாய்ந்துவிட்டார்' என அவதூறு பரப்புவார்கள் என்பதுதான் காரணம். இந்த மோதலின் மையமாக அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார் அனுராதா. இதனால் அதிகப்படியான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் சசிகலா. ஜெயா டி.வி ஊழியர்களுக்கும் இதே மனநிலைதான்" என்கின்றனர் குடும்ப உறவுகள். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!