'நாங்கள் ஆட்சியில் இருப்பதே வேஸ்ட்'- எதனால் இப்படிச் சொல்கிறார் அமைச்சர் உதயகுமார் | minister rp udyakumar says, about high court's verdict

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (28/04/2018)

கடைசி தொடர்பு:15:10 (28/04/2018)

'நாங்கள் ஆட்சியில் இருப்பதே வேஸ்ட்'- எதனால் இப்படிச் சொல்கிறார் அமைச்சர் உதயகுமார்

''ஜெயலலிதாவின் படத்தைத் திறக்காவிட்டால், நாங்கள் ஆட்சியில் இருப்பதே வேஸ்ட்'' என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.

ஆர்.பி.உதயகுமார்

மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "11 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிப்பு தேவையில்லை என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க 100 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பணியாற்ற வேண்டும். மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் லட்சியத்தை வென்றுகாட்டுகிற தீர்ப்பு. ஜெயலலிதாவின் திருஉருவப் படத்தை சட்டசபையில் திறந்திருப்பது மகிழ்ச்சி. அது, ஒன்றரைக் கோடி அ.தி.மு.க தொண்டர்களின் புனிதக் கடமை. உலகத் தமிழர்களின் கடமை. ஜெயலலிதாவின் படத்தை நாங்கள் திறக்க முடியவில்லை என்றால், நாங்கள் ஆட்சியில் இருந்தும் பயனில்லை. பதவியில் இருந்தும் பயனில்லை.

ஜெயலலிதாவின் படத்தை வைத்தது எங்களுக்குப் பெருமை. சட்டசபைக்கு சிறப்பு. ஜெயலலிதாவின் ஆன்மா ஆசியோடு கிடைத்த தீர்ப்பு. ஜெயலலிதா, தனது திட்டங்கள்மூலம் மக்கள் மனதில் குடிகொண்டவர். அன்னதான திட்டத்தைக் கொண்டுவந்தவர் ஜெயலலிதா. அதற்கு வழிகாட்டியவர், சத்துணவு திட்டத்தை தந்த எம்.ஜி.ஆர். எடப்பாடியார் தலைமை ஏற்றிருக்கிற, துணை முதல்வர் ஓ.பி.எஸ் வழி நடத்துகிற இந்த நல்ல திட்டங்களின்மூலம் மக்கள் சேவையாற்றி, ஜெயலலிதாவின் ஆசியோடு தனது முழு ஆயுளையும் பூர்த்திசெய்து, அடுத்த தேர்தலையும் வென்றெடுக்கும் என்பது உறுதி. எதிரிகளுக்குப் புத்தி புகட்டும் தீர்ப்புகள், ஜெயலலிதாவின் ஆசியால் கிடைத்திருக்கின்றன என்றார். இந்தப் பேட்டியின்போது, மதுரை தெற்கு எம்.எம்.ஏ-க்கள் சரவணன், சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.