ஆளுநர் பக்கத்தில் நிர்மலா தேவியை நிற்கவைத்தது யார்? பரபரப்பைக் கிளப்பும் முருகனின் மனைவி சுஜா

''நிர்மலா தேவியை ஆளுநருடன் புகைப்படம் எடுக்க வைத்தவரை விசாரித்தால் உண்மை தெரியவரும்'' என துணைப் பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா தெரிவித்தார்.

முருகனின் மனைவி சுஜா

பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான பிரச்னையில், சி.பி.சி.ஐ.டி-யும்  ஐ.ஏ.எஸ் அதிகாரி  சந்தானம் தலைமையிலான குழுவும் விசாரணை செய்துவருகின்றன. நிர்மலா தேவி சிக்கியதற்குப் பின், உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரைக் கைதுசெய்து, சி.பி.சி.ஐ போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், முருகனின் வீட்டில் நேற்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனையிட்டனர். விசாரணை அதிகாரி சந்தானம் குழுவின் இரண்டாம் கட்டமாக அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் முருகனின் மனைவி சுஜா, இன்று சந்தானத்தை சந்தித்து மனு அளித்தார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுஜா, ''மூன்று முறைதான் என் கணவர் நிர்மலா தேவியை சந்தித்துள்ளார். அதுவும் தனிப்பட்ட முறையில் அல்லாமல் அலுவலக ரீதியாகவே சந்தித்துள்ளார். எனது கணவர், உதவும் மனம் உடையவர். எனவேதான், புத்தாக்கப் பயிற்சிக்கு அறை வசதிகள் ஏற்பாடுசெய்தார். இதில், நிர்மலா தேவியுடன் பெண் பேராசிரியர்கள் சிலரும் ஆண் பேராசிரியர் ஒருவரும் இருந்துள்ளனர். பல உயர் அதிகாரிகளைத் தப்பிக்கவைக்கவே என் கணவரை பலிகடா ஆக்கியுள்ளனர் என்பதே உண்மை.

சி.பி.சி.ஐ.டி போலீஸார் என்  கணவரைக் கைதுசெய்யும் முன்பே, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வந்தன. குண்டர் சட்டத்தில் போட்டுவிடுவார்கள். எனவே, உடனே தலைமறைவாகிவிடுங்கள் என்று மிரட்டல் வந்தது. தற்போதும்வருகிறது. பல்கலைக்கழக விழாவில், ஆளுநர் அருகே நிர்மலா தேவியை நிற்கவைத்துப் புகைப்படம் எடுக்கவைத்தது யார் என்பதுகுறித்து விசாரணை நடத்தினாலே உண்மைகள் வெளிவரும்'' என்று கூறினார். தொடர்ந்து, ஒருமணி நேரத்துக்கும் மேலாக முருகனின் மனைவி சுஜாவிடம் இதுகுறித்து விசாரித்துவருகிறார் சந்தானம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!