வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (28/04/2018)

கடைசி தொடர்பு:15:30 (28/04/2018)

தூத்துக்குடி சங்கர ராமேஷ்வரர் திருக்கோயிலில் சித்திரை தேரோட்டம்!

தூத்துக்குடி,  அருள்மிகு பாகம்பிரியாள் அம்பிகை உடனுறை சங்கரராமேஷ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம்  நடைபெற்றது. 

தேரோட்டம்

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் அம்பிகை உடனுறை சங்கரராமேஷ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19ம் தேதி தொடங்கி இன்று 28-ம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த 10 நாள்களில் தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடைபெற்று வந்தது.  அத்துடன், சுவாமி – அம்பாள் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 3ம் நாள் திருவிழாவான  21-ம் தேதி, திருஞான சம்மந்தருக்கு ’ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி’ நடைபெற்றது. 

பக்தர்கள் தரிசனம்

7ம் நாள் திருவிழாவான கடந்த  25ம் தேதி காலை  10  மணிக்கு நடராஜருக்கு உருகுசட்ட சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.  10ம் நாள் திருவிழாவான  இன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு  பெரியத் தேரில்  பாகம்பிரியாள் அம்பிகை மற்றும் சங்கரராமேஷ்வரரும், சிறிய தேரில் விநாயகரும், சண்முகரும் எழுந்தருளி  நான்கு ரத வீதிகளிலும் பவனி வரும் வைபவம் நடைபெற்றது.  தேரோட்டத்தை முன்னிட்டு காலை முதல் மாலை வரை திருக்கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. 

மாலை 4 மணிக்கு சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது. 6 மணிக்கு திருப் பொற்சுண்ண விழா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.இரவு 9 மணிக்கி சுவாமி , அம்பாள் புஷ்ப பல்லக்கில் தடம் பார்த்தல் நிகழ்ச்சியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க