வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (28/04/2018)

கடைசி தொடர்பு:14:50 (28/04/2018)

யூபிஎஸ்சி தேர்வில் மாநில அளவில் முதலிடம்!- தருமபுரி மாணவர் கீர்த்திவாசன் சாதனை!

யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள்  நேற்று வெளியானது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன், இந்திய அளவில் 29-வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். கீர்த்திவாசன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் தெருவைச் சேர்ந்தவர். இவரது தந்தை வெங்கடேஷ்பாபு, தாய் தீபா, சகோதரி ஏமநிவேதா உள்ளனர். கீர்த்திவாசனின் தந்தை வெங்கடேஷ்பாபு, தருமபுரி மகாலட்சுமி சில்க்ஸ் பட்டுச்சேலை மற்றும் பட்டு நூல் விற்பனை செய்யும் தொழிலதிபர். சகோதரி ஏமநிவேதா வழக்கறிஞராக உள்ளார். 

ஐஏஎஸ் கீர்த்திவாசன்

எட்டாம் வகுப்பு வரை தருமபுரி காந்தி நகரில் உள்ள விஜய வித்யாலையா பள்ளியில் படித்த கீர்த்திவாசன், 9-ம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை சென்னை மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்துள்ளார். பட்டப் படிப்பை திருச்சி என்ஐடி பொறியியல் கல்லூரியில் முடித்துவிட்டு, கடந்த ஒரு வருடமாக டெல்லியில் ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி முடித்து, ஐஏஎஸ்-ல் தேர்வாகி,  தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 

வெளிநாடு சென்றுள்ள கீர்த்திவாசனுக்கு, தந்தை வெங்கடேஷ்பாபுவும், தாய் தீபாவும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதற்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். தமிழக அளவில் முதலிடம் பிடித்த கீர்த்திவாசனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகக் கருதப்படும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனைசெய்ததால், தருமபுரி மாவட்டம் முழுவதிலுமிருந்து கீர்த்திவாசனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்துவருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க