வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (28/04/2018)

கடைசி தொடர்பு:16:00 (28/04/2018)

மருமகள் அடித்துக்கொலை; மகனுக்கு கத்திக்குத்து! சொத்துக்காக பெற்றோர் நடத்திய கொடூரம்

"நீங்க வசதியா இருக்கும்போது, உங்களுக்கு நாங்க எதுக்கு சொத்து கொடுக்கணும்" என்று கூறி, மருமகளை மாமனார் மாமியார் அடித்துக்கொன்றதோடு, பெற்ற மகனையும் கத்தியால் குத்திய சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவருக்கு  ராதாகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனா். இவருக்கு 6 ஏக்கரில் வயல் மற்றும் 3 வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடைசி மகன் குமார் எலெக்ட்ரீஷியன்  வேலை பார்த்துவருகிறார். குமாரின் மனைவி அமராவதியின் அம்மா வீட்டில் நிறைய நிலம், சொத்துக்கள் உள்ளன. அந்த சொத்துக்கள் அனைத்தும் அமராவதியையே சேரும் என்பதால், கோவிந்தராசு தன்னுடைய சொத்துக்களை மற்ற இரண்டு மகன்களுக்குத்தான் கொடுப்பேன். குமாருக்கு கொடுக்க மாட்டேன் எனப் பலமுறை சொல்லியிருக்கிறார்.

இதனால், சொத்துப் பிரச்னை தொடர்பாக அரியலூா் நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்றுவருகிறது. ஆனால், நீதிமன்றத்தில் 3 மகன்களுக்கும் சொத்து பிரித்துக்கொடுக்கும் வகையில்தான் தீர்ப்பு வரும் என கூறப்பட்டதைத் தொடர்ந்து, மாமனார் கோவிந்தராசு, மாமியார் லோகாம்பாள், கொழுந்தனார் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி செல்வி ஆகியோர் சேர்ந்து நேற்றிரவு  குளித்துவிட்டு வந்த அமராவதியின் தலையில் கட்டையால் அடித்துக் கொலைசெய்துள்ளனா். பின்னா், வேலைக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பிய மகன் குமாரையும் அடித்து, வயிற்றில் கத்தியால் குத்திக் கொலைசெய்ய முயன்றுள்ளனர்.

குமார் அங்கிருந்து தப்பித்து, நண்பா்கள் உதவியுடன்  செந்துறை  அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அமராவதியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தலைமறையாக இருக்கும் கோவிந்தராசு, லோகாம்பாள், ராதாகிருஷ்ணன், செல்வி ஆகியோரைத் தேடிவருகின்றனர். சினிமா பட பாணியில் சொத்துக்காக  பெற்றோரே மகனைக் கொள்ள முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.