வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (28/04/2018)

கடைசி தொடர்பு:16:30 (28/04/2018)

'இருட்டு அறைகளிலிருந்து சுவாமி சிலைகளை விடுதலைசெய்யுங்கள்'- தமிழக அரசுக்குச் சென்ற கடிதம்

தினமும் பூஜைகள் செய்யவேண்டிய கடவுள் சிலைகளை, பாதுகாப்பு என்ற பெயரில் இருட்டறையில் பூட்டிவைக்கக் கூடாதென, சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய யானை ராஜேந்திரன், ‘சுவாமி சிலைகள், பூஜைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் 1959-ல் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சரத்துகளைப் பின்பற்றுவதே இல்லை. 1951-ம் ஆண்டிலிருந்து இன்று வரை ஏராளமான ஐம்பொன் மற்றும் கருங்கல் சிலைகள், விலையுயர்ந்த ஆபரணங்கள், பூஜைப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன. சாமி சிலைகளை அந்தந்த கோயில்களில் வைத்து பாதுகாக்க முடியாத அறநிலையத்துறை, பாதுகாப்பு மையம் என்ற பெயரில், இருட்டறைகளில் குப்பைகளுக்கி  டையே அடைத்து வைத்துள்ளனர்.

 பூஜை செய்து வணங்கவேண்டிய தெய்வங்களை இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் அடைத்துவைத்திருப்பது, தெய்வங்களைச் சிறை வைத்திருப்பதுபோல உள்ளது. கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம், பூஜைகள் தொடர்ந்து செய்ய வேண்டும். இல்லையென்றால், அவைகள் சக்தியை இழந்துவிடும் என்பது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கை. எனவே, பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அந்தந்த கோயில்களில் ஒப்படைத்து, மக்கள் பார்வையில் வைக்க வேண்டும்” என்றார்.