வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (28/04/2018)

கடைசி தொடர்பு:16:31 (28/04/2018)

சூடுபிடிக்கும் குட்கா வழக்கு.. பெண் போலீஸ் அதிகாரியிடம் உதவி கேட்கும் சி.பி.ஐ!

கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து வழக்கின் அத்தனை ஆவணங்களும், தீர்ப்பின் மறுநாளே சி.பி.ஐ. வசம்  ஒப்படைக்கப் படவுள்ளது என்கிறார்கள். அமைச்சர், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட 23 பேரை   விசாரணைக்கு  வரச் சொல்லி, முதற் கட்டமாக சம்மனும் அனுப்பப் படவுள்ளது.  குட்கா ஸ்மெல் உணர்ந்த காவல் வட்டாரத்தில், "குட்கா விவகாரத்தில் இரண்டு உதவி கமிஷனர், ஒரு துணை கமிஷனர், ஐ.ஜி. அந்தஸ்துள்ள அதிகாரி ஆகியோரைப் பின்னியே 'மாமூல்' வளையம் இருப்பதால் விசாரணை அங்கிருந்துதான் தொடங்கக் கூடும். விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமலும், உடல்நலம் சரியில்லை என்ற காரணங் காட்டியும் யார்-யார், எங்கெங்கே பதுங்கக் கூடும் என்ற தகவலையும், போலீசில் இருக்கும் சிலரே, 'போட்டு' க் கொடுத்துள்ளதால்,  சி.பி.ஐ., தயார் நிலையில் வலையைக் கையில் வைத்திருக்கிறது. அதேபோல்


                                        குட்கா போராட்டத்தில் ஸ்டாலின்

குட்கா வழக்கு விசாரணையை சி.பி.ஐ. ஏற்று நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, தமிழகத்தில் ஆளுங்கட்சியின் நாடித் துடிப்பை எகிற விட்டிருக்கிறது.

போதைப் பொருளான குட்காவைத் தமிழ்நாட்டில் விற்கத் தடை இருந்தபோதிலும், கள்ளச் சந்தையில் சட்டவிரோதமாக நடைபெறும் விற்பனையை யாரும் கண்டுகொள்ளவில்லை. குட்கா விற்பனையை போலீஸார் தடுக்கவும் இல்லை; அல்லது தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டின்போது, குட்கா விற்பனைக்கு தமிழக அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எவ்வளவு பணம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டது என்ற விவரம் அடங்கிய டைரி சிக்கியது. அதில், சட்டவிரோதமாக குட்கா விற்பனை உள்ளிட்ட பல விவகாரங்கள் வெளியில் வந்தன. அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமல்லாது பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்குக் கொடுத்த மாமூல் கணக்குகள் அந்த டைரியில் இடம் பெற்றிருந்தன. அந்த டைரி, வருமான வரித்துறை அதிகாரிகளின் கையில் கிடைத்தத் தகவல் அப்போதே வெளியே வந்தது. ஆனால், பல்வேறு அரசியல் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் தொடர்புடைய அந்த டைரி விவகாரம் அப்போது, ஏனோ அமுங்கிப் போனது. 

இந்தநிலையில், குட்கா விவகாரத்தில் மாமூல் வாங்கிய அதிகாரிகளை, சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி, தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழக்கறிஞர் வில்சன், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் இந்த வழக்கில் தீவிரம் காட்டினர். இன்னொரு பக்கம், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியும், இதே கோரிக்கையை முன்வைத்து கோர்ட்டுக்குப் போனார். ஆனால், தமிழக அரசோ, 'சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடமே வழக்கைக் கொடுக்கலாம்; அவர்கள் நன்றாக விசாரிப்பார்கள்' என்றது. இந்தச் சூழ்நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, குட்கா வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்து 26.4.2018 அன்று தீர்ப்பளித்தது.

குட்காவும், கேன்சரும்

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையிலான புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளுக்குப் பிடித்தமான பொருள்களாக பான், குட்கா போன்ற புகையிலைப் பொருள்கள் இருக்கின்றன. தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் எதிர்காலத் தலைமுறையை ஆணிவேரோடு அழிக்கக் கூடிய, இந்தப் புகையிலை வஸ்துகளை முற்றிலும் ஒழிக்க, உலக நாடுகள் ஓரணியில் கைகோத்து நிற்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பே உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில், "இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிகளவில் உள்ளனர்" என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய குட்கா போன்ற வஸ்துகளின் பயன்பாடு அதிகம் என ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 'நாட்டிலேயே தமிழகத்தில்தான்  குட்கா பயன்பாடும், புழக்கமும் அதிகம்' என்று தெரியவந்தது. புற்றுநோய்த் தாக்குதலில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்துக்கே அதிகளவு நிதி போய்க் கொண்டிருப்பதையும் மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டது. இதையடுத்து, 'தமிழகத்தில் குட்கா விற்பனையை உடனடியாகத் தடுத்து, புற்றுநோய் பாதிப்புகளுக்காகச் செலவிடும் நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப் பாருங்கள்' என்று தமிழகத்தை, மத்திய அரசு எச்சரித்தது.

குட்காவுக்கு தடைவிதித்த ஜெயலலிதா                                                                

மேலும் குட்கா, பான் மசாலா போன்ற பொருள்களின் மீது, கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு தடையைக் கொண்டு வந்தது. அடுத்ததாக குட்கா, பான் மசாலாவை உற்பத்தி செய்ய, விற்க உச்ச நீதிமன்றமும் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. அப்போது, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, மத்திய அரசு குட்கா போன்ற புகையிலைப் பொருள்களுக்குத் தடைவிதித்து இரண்டாண்டுகள் கழித்து, 2013 மே மாதத்தில் அவற்றுக்குத் தடை விதித்தார்.

குட்கா மீதான தடையை உறுதி செய்யும் அரசின் அறிவிப்பாணையும், 2015-ல்  வெளியிடப்பட்டது. இருப்பினும் பான், குட்கா விற்பனையை தமிழகத்தில் முழுமையாகத் தடுக்க முடியாமல் அரசு திணறியது. இந்நிலையில்தான் 2016-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி அன்று வரி ஏய்ப்புத் தொடர்பாக, வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில், 30 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. அதில், முதற்கட்டமாக ரூ.64 லட்சம் ரொக்கப் பணம், வரி ஏய்ப்புக் குறித்த பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குட்கா ரெய்டும், ரகசிய டைரியும்


                     

மத்திய - மாநில அரசுகளின் தடை, நீதிமன்றத்தின் தடைகளை மீறி, பான், குட்கா பொருள்கள், ரகசியமாகத் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வந்திருப்பது கண்டறியப்பட்டது. அவை அனைத்தும் சட்டவிரோதமாகவே நடந்த செயல் என்பதால், அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. 

சென்னை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் பான் மசாலா, குட்கா தயாரிப்பு நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். எம்.டி.எம் நிறுவனத்தின் உரிமையாளரான மாதவராவ் வீட்டில் நடந்த சோதனையில், ரூ. 250 கோடிக்கு மேல் அவர் வரிஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது, தமிழக அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி, முன்னாள் போலீஸ் கமிஷனர், உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலருக்கும் கோடிக்கணக்கில் மாதந்தோறும் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான விவரங்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படும் முக்கிய டைரி ஒன்று சிக்கியது.அதில் இருந்த மாமூல் குறித்த சங்கேதக் குறியீடுகள், ஆளும் தரப்பினர் மத்தியில் கூடுதல் உஷ்ணத்தைக் கிளப்பியது.

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நடக்கும்போதெல்லாம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றம் தி.மு.க. உறுப்பினர்கள், குட்கா விவகாரத்தைக் கையில் எடுப்பார்கள். வெளிநடப்பு, சாலை மறியல், முற்றுகைப் போராட்டம் என்று பல வடிவங்களில் தொடர் போராட்டங்களை நடத்தினர். தி.மு.க-வுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டங்களில் கைகோத்தன.

குட்கா தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மத்திய கலால் வரித் துறை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில், "கடந்த 3 ஆண்டுகளில் டெல்லியில் உற்பத்தி செய்யப்பட்ட குட்கா பொருள்கள் சட்ட விரோதமாகத் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இதற்காக ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு, இதுவரை 55 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

வருமானவரித்துறைப் புலனாய்வுப்பிரிவு சொன்னது என்ன ?

அதேபோல், வருமான வரித்துறைப் புலனாய்வு பிரிவின் முதன்மை இயக்குநர் சுசிபாபு வர்கீஸ் தாக்கல் செய்த பதில் மனுவில், "மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர்குப்தா ஆகியோர் பங்குதாரராக உள்ள செங்குன்றம் குட்கா கிடங்கில் 08.07.16 அன்று நடத்தப்பட்ட சோதனையில் தமிழகத்தில் குட்கா விற்பனைக்காக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய முக்கியப் பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் கிடைத்துள்ளது. எனவே, இந்த குட்கா ஊழலில் தொடர்புள்ள நபர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 11.08.16 அன்று, அன்றையத் தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு தனித்தனியாக ரகசியக் கடிதம் அனுப்பப்பட்டது. 01.04.16 முதல் 15.06.16 வரையிலான காலகட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு ரூ. 56 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக எம்.டி.எம். குட்கா அதிபர் மாதவராவ், விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அதேபோன்று 17.11.17 அன்று போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், குட்கா ஊழல் குறித்து, அப்போதைய போலீஸ் டி.ஜி.பி., முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய ரகசியக்  கடிதம், சசிகலாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்டது. குட்காவைத்  தமிழகத்தில், தடையின்றி விற்க பலருக்கும் லஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததை ‘ஹெச்.எம்’  என்ற குறியீட்டுடன் மாதவராவ் தனது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், குட்கா சோதனை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினரிடமும் ஒப்படைத்துள்ளோம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

                         சென்னை ஐகோர்ட்

தமிழக அரசு கோர்ட்டில் சொன்னது என்ன ?

இந்த வழக்கில் ஆஜராகி வாதிட்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக வழக்கை சி பி ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. குட்கா விவகாரத்தில் மாநில அரசு அதிகாரிகள் பலர் மீது புகார் தெரிவித்துள்ளனர். குறைந்த மனித சக்தியை வைத்துக்கொண்டு  சி.பி.ஐ.  இந்த வழக்கை விசாரிக்க முடியாது. தேவைப்பட்டால் இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கலாம். விசாரணை தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்கிறோம். இதேபோல் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளை கண்காணித்திருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையர் தரப்பில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், "மாநில போலீஸ் இந்த வழக்கை விசாரிக்கவில்லை. இது சம்பந்தமான விசாரணை குறித்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி-க்கு அறிக்கை அளிக்கவில்லை. ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் கீழ்தான் லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுகிறது. அதனால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை. மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார். 

 சி.பி.ஐ. சம்மனும், கோர்ட் தீர்ப்பும்

வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 30-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம். அதன் பின்னர் கடந்த 26-ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு, குட்கா தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. 

உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களும், சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. அமைச்சர், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட 23 பேரை   விசாரணைக்கு வரச் சொல்லி, முதற்கட்டமாக சி.பி.ஐ. சார்பில் சம்மனும் அனுப்பப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் அதிகாரி உதவியைக் கோரும் சி.பி.ஐ.?

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "குட்கா விவகாரத்தில் இரண்டு உதவி கமிஷனர், ஒரு துணை கமிஷனர், ஐ.ஜி. அந்தஸ்துள்ள அதிகாரி ஆகியோரைப் பின்னியே 'மாமூல்' வளையம் இருப்பதால் விசாரணை அங்கிருந்துதான் தொடங்கக் கூடும். விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமலும், உடல்நலம் சரியில்லை என்ற காரணத்தைக் காட்டியும் சில அதிகாரிகள் பதுங்கக்கூடும் என்று காவல்துறையில் இருக்கும் ஒரு சிலரே, தெரிவித்துள்ளதால், சி.பி.ஐ. தயார் நிலையில் உள்ளது. அதேபோல் ஆட்சியாளர்களின் எதிரணியைச் சேர்ந்தவர்கள், குட்கா மாமூலில் வைத்திருந்த தொடர்பை உறுதி செய்யவும், தங்களுக்கு இடையேயான அரசியல் கணக்கைத் தீர்த்துக் கொள்ளவும் காய் நகர்த்தல்களைத் தொடங்கி விட்டனர். குட்கா பதுக்கல் குறித்த விசாரணையில், திறம்படப் பணியாற்றிய பெண் துணை கமிஷனர் ஒருவரின் உதவியையும் சி.பி.ஐ. கேட்கக் கூடும் என்பதால், அந்த அதிகாரியும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்..." என்று தெரிவிக்கின்றனர்.

குட்கா மாமூல் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட சில நிமிடங்களில் போலீஸ் டி.ஜி.பி., முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை தற்செயலான ஒன்றாகக் கருத முடியாது. இதற்கிடையே, தமிழக  போலீஸ் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், எந்த விமர்சனத்துக்கும் பதிலளிக்கவில்லை. காக்கிச் சீருடை அவரை மௌனத்தில் ஆழ்த்தியுள்ளது...


டிரெண்டிங் @ விகடன்