வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (28/04/2018)

கடைசி தொடர்பு:18:00 (28/04/2018)

காளிமலையில் நாளை சித்ரா பௌர்ணமி பொங்காலை விழா!

பத்துகாணி அருகே காளிமலை பத்திரகாளி அம்மன் கோயிலில் நாளை சித்திரா பவுர்ணமி பொங்காலை விழா நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்துக்காணி அருகே, காளிமலை பத்திரகாளி அம்மன் கோயிலில் நாளை, சித்ரா பௌர்ணமி பொங்காலை விழா நடக்கிறது.

காளிமலை கோயில் அறங்காவலர்

இதுகுறித்து காளிமலை கோயில் அறங்காவலர் சுவாமி சைதன்யானந்தஜீ மஹராஜ் கூறுகையில், குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, மண்டைக்காடு, கொல்லங்கோடு, காளிமலை என நான்கு சக்தி ஸ்தலங்கள் உள்ளன. இவற்றுள் காளிமலை சக்தி தலம் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அகஸ்தியர் முனிவருக்கு மும்மூர்த்திகளும் காட்சி அளித்தது இந்த தலத்தில்தான். போரின்போது, திருவிதாங்கூர் மார்த்தாண்டவர்மா மஹாராஜாவை காளிமலை அம்மன் காப்பாற்றியதால், இக்கோயிலுக்காக 600 ஏக்கர் நிலத்தை மன்னர் எழுதிவைத்தார். பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுவதால், காளிமலை அம்மனை தரிசிக்க சித்ரா பௌர்ணமிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். காளிமலை கோயில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, கடந்த 23-ம் தேதி, கன்னியாகுமரியிலிருந்து காளிமலைக்கு இருமுடிகட்டி புனித யாத்திரை தொடங்கியது. சித்ரா பௌர்ணமியை முன்னிடு, வரும் 29-ம் தேதி (நாளை) காளிமலையில் பொங்கல் வழிபாடு நடக்கிறது. இதில், 50 ஆயிரம் பெண்கள் பொங்கலிடுகிறார்கள். அதற்கான பொங்காலைக் களம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.