'மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம்’ - அய்யாக்கண்ணுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு, சென்னை மெரினா கடற்கரைப் போராட்டம் நடத்தத் தடைசெய்யப்பட்ட பகுதியாக தமிழக அரசு அறிவித்தது. பதட்டமான சூழ்நிலை நிலவும் போதெல்லாம், மெரினாவில் போலீஸ் படை குவிக்கப்பட்டதுடன், தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அதற்கு உதாரணம்தான், மெழுகுவத்தி ஏந்தி மெரினாவில் போராடிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களின் சிறைவாசம். 

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக, சென்னை மெரினாவில் 90 நாள்கள் உண்ணாவிரம் இருக்க அனுமதிக்கக் கேட்டு, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை, கடந்த சில வாரங்களாக நடந்துவந்தது. இந்நிலையில், மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அய்யாக்கண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திட வேண்டும் எனவும், எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!