வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (28/04/2018)

கடைசி தொடர்பு:18:30 (28/04/2018)

30 கி.மீ தூரத்தை 2.35 மணியில் ஓடிக் கடந்த 2-ம் வகுப்பு மாணவன்! - தூத்துக்குடியில் சாதனை

தூத்துக்குடியில், 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர், 30 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரத்துக்குள் ஓடி சாதனை படைத்துள்ளார்.  

தூத்துக்குடி சிறுவன்

தூத்துக்குடி, எக்ஸன் மெட்ரிக்  பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துவரும்  மாணவன் சண்முகவேல். தடகளத்தில் ஆர்வம் உள்ள இவர், லிம்கா சாதனைக்காக முயன்றுவருகிறார். அதற்கான  பயிற்சியில் ஈடுபட்டுவரும்  சண்முகவேல், துாத்துக்குடி மில்லர்புரம் சந்திப்பில் இருந்து, செக்காரக்குடி வரையிலான 30 கி.மீ தூரத்தை 3 மணி நேரத்தில் ஓடிக் கடக்க முடிவுசெய்து, ஓடினார். இந்தச் சாதனை ஓட்டத்தில், கடக்கவேண்டிய எல்லையை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, அதாவது 2.35 மணி நேரத்திலேயே ஓடி சாதனை படைத்துள்ளார். 

இன்று அதிகாலை 5.20 மணியளவில், தூத்துக்குடி மில்லர்புரம் சந்திப்பில் கிளம்பிய சண்முகநாதன்,  புதுக்கோட்டை வழியாக செக்காரக்குடிக்கு 8.20 மணிக்குள் சென்றடைந்தார்.

மாணவர் சண்முகவேலுக்கு வாழ்த்துகளைச் சொல்லி, அவரிடம் பேசினோம். "எங்க அப்பா மிலிட்டரியில வேலை பார்த்தாங்க. தினமும் காலையில் அப்பா ஓட்டப் பயிற்சிக்குப் போகும்போது நானும் கூடவே போவேன். ஓட்டத்தில் சாதனைபுரிய வேண்டும் என 5 கி.மீ தூரத்தில் ஓட்டப் பயிற்சியைத் தொடங்கினேன்.  இன்று,  30 கி.மீ தூரத்தை 3 மணி நேரத்திற்குள் ஓடியுள்ளேன். தொடர்ந்து 40 கி.மீ மற்றும் 60 கி.மீ தூரம் ஓட்டத்திற்கான பயிற்சி எடுக்க இருக்கிறேன். 12 முதல் 16 வயது சப் ஜூனியர் பிரிவிற்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம் மற்றும் பாக்ஸிங் ஆகியவற்றில் தேசிய அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்" என்றார். 

மாணவனின் தந்தை மணியிடம் பேசினோம், "6 வயதில்  5 கி.மீ, 6 கி.மீ, தூரமும், 7 வயதில் 10 கி.மீ, 13 கி.மீ, தூரமும் ஓடியுள்ளார். தொடர்ந்து 26 கி.மீ. ஓட்டப் பயிற்சிக்குப் பின், தற்போது 30 கி.மீ தூரத்தை 3 மணி நேரம் என இலக்கு நிர்ணயித்து, 2.35 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்துள்ளார். 'ஊசூ’ என்ற சண்டைப் பயிற்சியில் 26 முதல் 32 கிலோ எடைப் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.

மிலிட்டரியில் வேலைபார்த்தபோது, கையில் குண்டடிபட்டதால் தொடர்ந்து என்னால் பணிபுரிய முடியவில்லை. என் ஆசையை மகன் நிறைவேற்றிவருகிறார்"’ என்றார்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க