அமிலம் ஊற்றி மரங்கள் அழிக்கப்படுகிறதா? - கிரிவலப் பாதையில் கலெக்டர் ஆய்வு!

கிரிவலப்பாதையில் உள்ள பழைமை வாய்ந்த மரங்கள் காய்ந்துபோன நிலையில், 'அமிலம் ஊற்றி மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன' என்ற சந்தேகத்தில் திருவண்ணாமலை மக்களும் சமூக ஆர்வலர்களும் கொந்தளித்துப்போய் உள்ளனர். 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், கிரிவலப்பாதையில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, 2016-ம் ஆண்டு விரிவாக்கப் பணிகள் துவங்கியது. பாதை விரிவாக்கத்தால் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் நிலை ஏற்பட, மரங்களை வெட்டக் கூடாது எனத் திருவண்ணாமலை மக்கள் பல போராட்டங்களை நடத்தினர். இந்த விவகாரத்தில், தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி மரங்களை வெட்டத் தடைவிதித்து, மரங்களை வெட்டாமல் பாதை விரிவாக்கம் செய்யச் சொன்னது. இந்நிலையில், சில மாதங்களாகவே கிரிவலப்பாதையில் ஆங்காங்கே மரங்கள் பட்டுப்போயின. இது, திருவண்ணாமலை மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. மரங்கள் அமிலம் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற புகார், மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்குச் சென்றது. புகாரை அடுத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவன பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன், வனத்துறை பேராசிரியர் சிவப்பிரகாஷ் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.

 மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,  ''கிரிவலப்பாதையில் 1,185 மரங்கள் உள்ளன. சமீபத்தில் சில மரங்கள் பட்டுப்போய் உள்ளதாகவும், ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டதாகவும் புகார் வந்தது. அதன் அடிப்படையில் வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர்மூலம் ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டது. பட்டுப்போன மரங்களின் வேர் மண்ணை எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 5-ஆண்டுகளாக இந்த மரங்கள் காய்ந்துபோன நிலையில் உள்ளன. இதுவரை 62-மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இவற்றுக்கு ஆசிட் எதுவும் ஊற்றப்படவில்லை. இந்த 62- மரங்கள் தண்டு துளைப்பான் பூச்சியாலும் மற்றும் மரத்தில் விளம்பரம் செய்பவர்கள் அடிக்கும் ஆணியாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே, மரங்கள் பட்டுப்போனதற்குக் காரணம். இதில், 6-மரங்களைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த மரங்களுக்கு நுண்ணுயிர் ஊட்டச்சத்து மற்றும் தண்டுதுளைப்பான் பூச்சி விரட்டி ஆகிய உரங்கள் போடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மீதம் உள்ள 56- மரங்களைக் காப்பாற்ற முடியாத நிலையில், அந்த இடத்தில் புதிய மரக்கன்றுகள் வைத்துப் பாதுகாக்கப்படும். 

இந்தத் தண்டு துளைப்பான் வண்டுகள், பெரிய அளவு மரங்களையே தாக்கும். 10 மாதங்கள் மரக்கிளைகளில் புழுவாக இருந்து, அதன் பின்பு இரண்டு வாரங்கள் கழித்து வண்டாக உருமாறி மரங்களைக் துளைக்கும். மண் தரையில் இருந்து ஒரு அடிக்கு மேல் அடி மரத்தைத் துளையிட்டு அழிக்கும். இனிவரும் காலங்களில் மரத்தைப் பாதுகாக்க, ஓட்டை உள்ள மரங்களில் நுண்ணுயிர் மருந்தைக் களிமண்ணில் கலந்து ஓட்டையை அடைத்தால், அந்த வண்டுகள் உள்ளேயே இறந்துவிடும். மரமும் பாதுகாப்பாக இருக்கும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!