வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (28/04/2018)

கடைசி தொடர்பு:18:20 (28/04/2018)

'லஞ்சம் வாங்கவில்லை என சத்தியம் செய்யுங்கள்!’ - கையில் சூடத்துடன் அதிகாரிகளை அதிரவைத்த விவசாயி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்ப்புக் கூட்ட த்தில், விவசாயி ஒருவர் தனது கையில் சூடத்தை ஏற்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரியை சத்தியம் செய்யச் சொன்ன சம்பவம், அங்குள்ளவர்களை அதிர வைத்துள்ளது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்துவருகிறது. இதற்கு, விவசாயிகள் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது பெரும்பாலான பகுதிகளில் வழக்கமாக உள்ளது. இதைத் தடுத்துநிறுத்த வேண்டும் என விவசாயிகள் நீண்டகாலமாகவே வலியுறுத்திவருகிறார்கள். இந்நிலையில்தான், தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்ப்புக் கூட்டத்தில் இந்த விவகாரம் பெரும் பிரசனையாக வெடித்தது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ஒரு மூட்டைக்கு 20 முதல் 35 ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது என சந்திரன் என்ற விவசாயி குற்றம் சாட்டினார்.

ஆனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ராஜகோபால், விவசாயியின் குற்றச்சாட்டை மறுத்ததோடு, விவசாயி சந்திரனின் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அதிகாரியின் சமாதானத்தை ஏற்காத விவசாயி சந்திரன், தனது கையில் சூடத்தை ஏற்றி, ‘லஞ்சம் வாங்கப்படவில்லையென்றால், இந்த சூடத்தை அனைத்து நீங்கள் சத்தியம் செய்யுங்கள்’ என்றார். இதனால், ராஜகோபால் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், விவசாயி சந்திரன் கையில் எரிந்துகொண்டிருந்த சூடத்தின்மீது தண்ணீர் ஊற்றி அணைத்து, அவரை சமாதானப்படுத்தினர்.