வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (28/04/2018)

கடைசி தொடர்பு:21:30 (28/04/2018)

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்ன நாய், நரி குட்டிக் கதை!

சேலத்தில் நடந்த அரசு விழாவில், ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் நாய், நரி கதையொன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னார்.  

எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் அழகாபுரம் கூட்டுறவு வங்கி மண்டபத்தில் பட்டு விவசாயிகள் மற்றும் பட்டுத் தொழில் முனைவோர்க்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் துவக்க விழா புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா முடிவுற்ற திட்டப் பணிகள், திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் எம்.பி-கள்., பன்னீர்செல்வம், சுந்தரம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கைத்தறித்துறை செயலாளர், இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'கட்சா பட்டு உற்பத்தியில், தமிழகம் இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பட்டு உற்பத்தியில் தமிழகத்தை முன்மை மாநிலமாக உருவாக்க அரசு முயன்றுவருகிறது’ என்று பேசியவர், தீடீரென ஒரு குட்டிக் கதை சொல்லத் தொடங்கினார். ''ஒரு அடர்ந்த காட்டில் ஒரு நாயும், ஒரு நரியும் இருந்தன. அவற்றுக்குள் எப்போதும் பகைமை உணர்வுகள் மேலோங்கி இருந்துவந்தது. ஒன்றை ஒன்று தீர்த்துக் கட்டுவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தன.

ஒருநாள், புதருக்குள் நரி மறைந்திருந்தது. அந்த வழியாக நாய் வந்தது. நாயைப் பார்த்து நரி தன் குரலை மாற்றி, நாய் குரலில் 'நாயே இந்த வழியாகப் போகாதே. உன் பகைவன் உன்னை தீர்த்துக்கட்ட இருக்கிறான்’ என்றது. உடனே நாய் பயந்துகொண்டு, திரும்பி ஓடியது.

திரும்பி ஓடிய நாய், கரடியிடம் சென்று ஆலோசனை கேட்டது. கரடியோ, 'உங்க ரெண்டு பேருக்கும் பகைமை வளர்ந்துகொண்டேபோகிறது. இது நல்லதுக்கு இல்லை. நீங்கள் 2 பேரும் ஒற்றுமையாக இருந்தால், இந்த காட்டையே ஆளலாம்’ என்றது. அதற்கு நாய், 'நான் உங்கள் பேச்சைக் கேட்கிறேன். ஆனால், நரி தன் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லையே என்றது'. இது, அனைத்தையும் மறைந்து கேட்டுக்கொண்டிருந்த நரி, 'இனி நானும் ஒற்றுமையாக இருக்கிறேன். நாயை பகைத்துக்கொள்ள மாட்டேன்' என்று கூறிவிட்டு நாயும் நரியும் சேர்ந்து சென்றது. அப்படி நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’' என்று யாருக்கோ சூசகமாகச் சொல்லி முடித்தார்.