'கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது' - எஸ்.வி சேகர் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்! | madras high court rejects sve shekar’s request

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (28/04/2018)

கடைசி தொடர்பு:19:05 (28/04/2018)

'கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது' - எஸ்.வி சேகர் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்யும் காவல்துறை நடவடிக்கைக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. 

நிர்மலா தேவி விவகாரத்தில், செய்தியாளர்கள் சந்திப்பின் முடிவில் பெண் செய்தியாளரின் கன்னத்தில் ஆளுநர் தட்டிக்கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆளுநர் வருத்தம் தெரிவிக்கவே, விவகாரம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. ஆனால், நடிகரும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில், ஆளுநருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த அவதூறான வகையில் கருத்து பகிர்ந்திருந்தார். இவரது கருத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்து. அவருக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஆங்காங்கே அவர் மீது புகார்களும் கொடுக்கப்பட்டன. 

இதையடுத்து, பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் எஸ்.வி சேகர் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை வரும் வரை தன்னைக் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா,''வழக்கமாக நான் யாரையும் கைதுசெய்யத் தடை விதிப்பதில்லை. எனவே, இந்த வழக்கில் கைதுசெய்ய காவல்துறையினருக்குத் தடை விதிக்க முடியாது. முன்ஜாமீன் மனு, கோடைக்கால நீதிமன்றத்தின் முதல் அமர்வில் விசாரிக்கப்படும். வழக்கில் இணைப்பு மனுதாரர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க