'பூங்கா வளாகத்தில் மணிமண்டபமா?’ - முதலமைச்சருக்கு எதிராகக் கொந்தளிக்கும் சேலம் பா.ஜ.க

சேலம் அண்ணா பூங்கா

மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவிற்கு  சேலம் அண்ணா பூங்காவில் 2100 சதுர அடி நிலப்பரபில் மணிமண்டபம் கட்டப்பட இருக்கிறது. ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் இதற்கான பணிகளைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்ட இருக்கிறார். இந்த இடத்தில் மணி மண்டபம் கட்டுவதற்கு சேலம் பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, தடைகேட்டு நீதிமன்ற படியும் ஏற இருக்கிறார்கள்.

இதுபற்றி சேலம் பா.ஜ.க.கட்சியின் மாவட்டத் தலைவர் கோபிநாத்திடம் கேட்டதற்கு,''சேலத்தில் உள்ள அண்ணா பூங்கா 10, 20 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா இல்லை. சேலத்தின் மையப்பகுதியில் விபத்துகள் நிறைந்த போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதி. சேலம் மக்களின் பொழுதுபோக்கிற்கு அமைந்துள்ள ஒரே பூங்கா, அண்ணா பூங்காதான்.

சேலம் மக்கள் குழந்தைகளோடு அதிகளவு வரும் இடங்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவெ இட நெருக்கடி பிரச்னையில் குழந்தைகள் பயணிக்கும் ரயில் வண்டி, ராட்டினம் ஆகியவற்றை எடுத்து விட்டார்கள். இந்தநிலையில் இங்கு மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் கட்டப் போவதாக அறிவித்து, முதல்வர் நாளை அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

இதனால் பூங்காவிற்கு வரும் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, இடநெருக்கடியால் அண்ணா பூங்கா களையிழந்து விடும். மறைந்த முதல்வர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், சேலம் டவுன் பகுதியில் நிறைய இருக்கின்றன. அங்கு கட்டிக் கொள்ளட்டும். ஆனால் அண்ணா பூங்காவில் கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு தடை கேட்டு நீதிமன்றம் செல்ல இருக்கிறோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!