வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (28/04/2018)

கடைசி தொடர்பு:23:00 (28/04/2018)

'கதவை பூட்டிக்கொண்டு குட்கா தயாரித்தார்கள்!’ - அதிரடி ரெய்டின் பின்னணியை விவரிக்கும் எஸ்.பி

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா தொழிற்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர் பல லட்சம் ரூபாய் மதிப்பாலான குட்கா பொருட்களை கைப்பற்றிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

குட்கா தொழிற்சாலை

கோவை மாவட்டம் சூலூரை அடுத்து உள்ளது கண்ணம்பாளையம். இந்த பகுதியில் அமித் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான  தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் சட்டவிரோதக குட்கா பொருட்கள்  தயாரிக்கப்படுவதாக கோவை மாவட்ட எஸ்.பி மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு 8 மணியளவில் அந்த தொழிற்சாலைக்குள் நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டது எஸ்.பி மூர்த்தி தலைமையிலான தனிப்படை.

இந்த அதிரடி ரெய்டில், 3.24 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்காவும், 750 கிலோ பான்மசாலாவும் கைப்பற்றப்பட்டன. இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் அமித் ஜெயின் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதும் கோவை சூலூரை சேர்ந்த ரகு என்பவரது மேற்பார்வையில் மூன்று வட மாநில தொழிலார்களோடு இந்த தொழிற்சாலை இயங்கி வந்துள்ளதும் போலீஸ்  விசாரணையில் தெரியவந்துள்ளது. அமித் ஜெயினை கைது செய்யும் முனைப்பில் இருக்கும் எஸ்.பி மூர்த்தியிடம் இதுகுறித்துப் பேசினோம்,

 "எனக்கு தகவல் வந்த அன்று இரவே தனிப்படை அமைத்து நடவடிக்கையில் இறங்கி விட்டோம். தமிழகத்தில் குட்காவுக்கு தடையிருப்பதால்  வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கதவை பூட்டிவிட்டு உள்ளுக்குள் குட்கா தயாரித்திருக்கிறார்கள். அருகில் தறி பட்டறைகள் அதிக அளவு இருப்பதால் அந்த சத்தத்தில் இதற்குள் என்ன நடக்கிறது என்பது அக்கம்பக்கத்தினர் யாருக்கும் தெரியவில்லை. நாங்கள் நேற்று மதியத்திலிருந்து நோட்டம்விட்டு உறுதி செய்துகொண்ட பிறகே தொழிற்சாலைக்குள் நுழைந்தோம். 2013-ம் ஆண்டிலிருந்தே இந்த தொழிற்சாலை செயல்பட்டு வந்திருக்கிறது. இதன் மேனேஜர் ரகு மற்றும் பணியாளர்கள் மூன்று பேரிடமும் விசாரித்து வருகிறோம். அமித் ஜெயினை அரெஸ்ட் செய்தபிறகே மேற்கொண்டு விபரங்களைச் சொல்லமுடியும்’’ என்றார்.

குட்கா பறிமுதல் என்ற செய்தியறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. கார்த்திக் கூறுகையில், "குட்கா பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனையை அனுமதிக்கிறார்கள். இதனால் இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி எங்கள் செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின்  சட்டமன்றத்தில் பலமுறை பேசியுள்ளார். அதுமடுமல்லாது குட்கா விவகாரம் தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 2 நாள்களுக்கு முன்புதான் அந்த வழக்கில் குட்கா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு தீர்ப்பு வந்துள்ளது. இந்த சூழலில் கோவையில்  தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக டெல்லியைச் சேர்ந்த நபர் தயாரித்து வந்த சம்பவம் தமிழக அரசின் முகத்திரையை கிழித்திருக்கிறது. சி.பி.ஐ விசாரணைக்கு அனுமதியளித்து தீர்ப்பு வந்ததும், நடவடிக்கை எடுப்பதுபோல நடிக்கிறார்கள். இவ்வளவு நாட்களாக இவர்களுக்கு எப்படி இது தெரியாமல் இருக்கும்?’’ என்றார்