வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (28/04/2018)

கடைசி தொடர்பு:21:15 (28/04/2018)

'மெரினா போராட்ட அனுமதி ரத்து!’ - தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மெரினாவில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக, சென்னை மெரினாவில் 90 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி கேட்டு, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி அமர்வு,  மெரினாவில் ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் உண்ணாவிரதம் நடத்த அய்யாக்கண்ணுக்கு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவசர வழக்காக மாலையே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்புராயன் ஆகியோர் அடங்கிய 3-வது அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  

அப்போது,''2003-ல் இருந்து மெரினாவில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. போராட்டம் நடத்தும் இடத்தை முடிவு செய்யும் அதிகாரம் சென்னை காவல் ஆணையருக்கே உள்ளது. முதல்வரே சேப்பாக்கத்தில் தான் போராட்டம் நடத்தினார். சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் மெரினாவை பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். எனவே தனி நீதிபதியின் உத்தரவு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஒருவருக்கு அனுமதி கொடுத்தல் ஒவ்வொருவராக வருவார்கள்" என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அய்யாக்கண்ணு தரப்பில், சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 8 கி.மீ. நீளம்கொண்ட மெரினா கடற்கரையில் ஒரு கி.மீ. தூரத்துக்கு போராட்டம் நடத்த அனுமதிக்கலாம் என்று வாதிடப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மெரினாவில் ஒரு நாள் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், உண்ணாவிரதம் இருக்க மாற்று இடத்தைத் தேர்வு செய்யலாம் எனவும், அவ்வாறு தேர்வு செய்தால் போராட்டம் நடத்த அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க