'ஆர்.கே நகரில் தி.மு.க டெபாசிட் இழந்தது இதனால்தான்' - எடப்பாடி பழனிசாமி கணிப்பு | edappadi palanichami slams dmk and stalin in thiruvarur meeting

வெளியிடப்பட்ட நேரம்: 22:06 (28/04/2018)

கடைசி தொடர்பு:22:06 (28/04/2018)

'ஆர்.கே நகரில் தி.மு.க டெபாசிட் இழந்தது இதனால்தான்' - எடப்பாடி பழனிசாமி கணிப்பு

ஸ்டாலின் நடவடிக்கையால் தான் ஆர்.கே நகர் தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்தது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் நாகப்பட்டினத்தில் துணை முதல்வரும், தஞ்சாவூரில் அமைச்சர் தங்கமணி தலைமையில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இன்று திருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரடாச்சேரியில் மேள தாளங்கள் முழங்க, கிராமிய கலைகளான மானாட்டம், மயிலாட்டம் எனச் சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும்      'வேளாண்மை காக்கும் பேரியக்கத்தின் முதல்வரே, மேட்டூர் அணையைத் தூர் வாரி விவசாயிகளின் துயர் துடைத்தவரே' என்ற வாசகங்களுடன் பிரமாண்ட அலங்கார வளைவுகளும் வைத்திருந்தனர். பின்னர் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த எடப்பாடி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பிறகு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார். 

அதில், ''ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஆட்சியைக் கலைத்து விடச் செய்த சூழ்ச்சிகளை எல்லாம் முறியடித்து விட்டு ஓராண்டுக்கு மேலாகச் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் எடப்பாடி. ஜெயலலிதா போலவே காவிரி பிரச்சனையை கையாண்டார். காவிரியைக் காக்கின்ற வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எதிர்க்கட்சிகள் அனைத்தையும் கூட்டி 7 மணி நேரத்திற்கு மேலாக கூட்டத்தை நடத்தி சாதனை செய்தவர் முதல்வர். காவிரியை திருவாரூரில் பிறந்த கருணாநிதி தான் தொலைத்தார். சாவியைத் தொலைத்த இடத்தில் தான் தேட முடியும். அதனால் தான் இங்குக் கூட்டத்தை நடத்தி சாவியை தேடி வருகிறார். சேலம் இங்கு வந்து விட்டது. இனி மேட்டூர் நீர் டெல்டாவிற்கு வந்து விடும்" என எடப்பாடியை புகழ்ந்து பேசினார். 

அதன் பிறகு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''காவிரி பிரச்னை நாம் பிறக்கும் முன்னே ஆரம்பித்தது. எப்போதெல்லாம் அந்தப் பிரச்னை வரும் போது நமக்குப் பாதகம் தான். ஹேமவதியில் அணை கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நம் உரிமையை விட்டுக் கொடுத்தவர் கருணாநிதி. தி.மு.க-வைப் போல் நேரத்திற்குத் தகுந்த மாதிரி பச்சோந்திபோல் நிறம் மாறுகிற கட்சி இல்லை அ.தி.மு.க. ஸ்டாலின் நடவடிக்கையால் தான் ஆர்.கே நகர் தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்தது. கருணாநிதி குடும்ப அரசியல் செய்தவர். அவர்களுக்கு மக்களை பற்றியெல்லாம் கவலை இல்லை. அதேபோல் இப்போது தனக்கு பின்னால் தன் மகன் உதயநிதி வரவேண்டும் என்று ஊர் ஊராக அழைத்துக் கொண்டு திரிகிறார் ஸ்டாலின். 2007-ல் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது தி.மு.க. அப்போது மத்திய அரசிற்கு அழுத்தக் கொடுக்காதவர்கள், இப்போது நாம் அழுத்தம் கொடுக்கவில்லை என்கிறார்கள். ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் மானம் கெட்ட  எடப்பாடி அரசு, எடுபிடி எடப்பாடி அரசு என பேசுகிறார். அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. 

ஆட்சி தொடங்கிய நாளில் இருந்து எப்படியாவது கவிழ்த்து விடவேண்டும் என நினைத்தார். அது முடியாமல் போகவே இப்படிப் பேசுகிறார். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அதன் தீர்மானத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தேன். எல்லோரும் சேர்ந்து உங்களைச் சந்திக்க வேண்டும் என்றேன். பிரதமர் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சரைச் சந்தியுங்கள் என்றார். அதற்கு ஸ்டாலின் ஒத்துக்கொள்ளவில்லை. திடீரென அவர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி நடைப்பயணம் நடக்கிறார். காவிரிக்காகத் தொடர்ந்து 80 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார் ஜெயலலிதா. காவிரிக்காகவும், விவசாயிகளுக்காகவும் அனைத்தையும் செய்தது அ.தி.மு.க தான். கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அவர்களும் ஸ்டாலினோடு சேர்ந்து நடைப்பயணம் நடக்கிறார்கள் என்றார். முன்னதாக விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் யாரையும் கூட்டத்தில் பேச வைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க